“Awareness of Nothingness”

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்

ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணிலொன்றும் இல்லா

வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே

அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.
இது அபிராமி அந்தாதி பாடல் 16 இல் உள்ள வரிகள்.

கிளியே: கிளி என்பது மந்திரத்திற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. கிளி எவ்வாறு ஒரே வார்த்தையை சலிக்காமல் அப்படியே திருப்பித் திருப்பி சொல்லுமோ அவ்வாறே பச்சை வண்ண தன்மை கொண்ட பிரம்ம மந்திரத்தை… கிளி போன்று இடைவிடாது பிராணங்களின் வழியே திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தால்…

கிளைஞர்: என்பதற்கு நட்பு என்று ஒரு பொருள் உண்டு. அவ்வாறு சொல்லுபவரின் மனதோடு அன்னை அபிராமி நட்பு கொண்டு, அம் மனதை செம்மையாக்குவாள். அவ்வாறு. மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாகி… அது ஒளிரும் ஒளிக்கு எல்லாம் ஒளியாகி..

எண்ணிலொன்றும் இல்லா வெளியே: அவ்வொளியானது அத்தகையவர் மனதினுள் ஒன்றும் இல்லாத வெளியாக, அதாவது ஒன்றுமில்லாத தூய விழிப்புணர்வாக (Awareness of Nothingness) ஆகும்.

வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே: அவ்வாறு அகத்தில் ஒன்றும் இல்லாத விழிப்புணர்வாக வெளிப்படும் அன்னை அபிராமி ஐம்பூதங்கள் உள்ளடங்கிய பிரம்மாண்டமான பிரபஞ்சமாகவும் வியாபித்திருக்கிறாள்.

அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே:
இத்தகைய அளவு கடந்த அறிவொளியாக விரிந்துள்ள அபிராமி அன்னை என்னுடைய அறிவு அறியும் அளவிற்கு அளவானது அதிசயத்திலும் அதிசயமே என்று அபிராமி பட்டர் தன்னுள் உணர்ந்த பராசக்தியை இவ்வாறு போற்றி பாடியுள்ளார்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment