
“தவறாத சந்தானமும்” இது அபிராமி பட்டர் அன்னை அபிராமியிடம் வைத்த விண்ணப்பங்களின் ஒன்று.
ஒரு தவறாத சந்தான பாக்கியம் ஏற்பட காரணமாக விளங்கும் கணவன் மனைவி இவ்விருவரின் சேர்க்கைக்கு, பல முன் இலக்கணங்கள் திருமூலரால் திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய இலக்கணத்தோடு இணைந்தால் கிட்டும் சந்தானத்தில்…
விரும்பும் வகையில் ஆண் அல்லது பெண், நல்ல தீர்க்கமான ஆயுள், அழகு நிறைந்தஅறிவு, ஆரோக்கியம், சத்துவ குணம் நிரம்பப் பெற்ற வீரம், சகல ஐஸ்வர்யங்கள் போன்ற தன்மைகள் உள்ளடங்கிய சந்தானம் பாக்கியம் தவறாது கிட்டும்.
இத்தகைய இலக்கணங்கள் ஏதும் அறியாமல் வெறும் இச்சை வயப்பட்டு சேரும் சேர்க்கையில் உருவாகும் சந்தானங்கள் பிற்காலத்தில் தவறிய சந்தானங்களாகவே உருமாறும். எனவேதான் அபிராமி பட்டர் “தவறாத சந்தானமும்” அதற்கு உறுதுணையாக இருக்கும் அன்பு அகலாத மனைவியும், அதற்கு முக்கிய காரணமாய் விளங்கும் “சலியாத மனமும்” முறைப்படுத்தி விண்ணப்பித்து அன்னை அபிராமியிடம் வேண்டுகிறார்.
இத்தகைய இலக்கணச் சேர்க்கையை அறிந்த அகஸ்திய மகரிஷியின் அன்பு அகலாத மனைவி லோபா முத்திரை, ஒரு சந்தான பாக்கியம் கேட்டு அகஸ்தியரிடம் வேண்டும்போது, அதற்கு அவர் உனக்கு எத்தகைய மகன் வேண்டும் என்று லோபா முத்திரையிடம் கேட்டு, அவ்வாறே தவறாத சந்தானத்தை அளித்தருளியதை இதற்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

