
“தன்னைத்தான் பார்த்தார் இல்லை”
எவ்வாறு ஒருவர் தன்னைத்தான் பார்ப்பது?
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பிலேயே மூன்று விதமான உருவங்கள் அருளப்பட்டுள்ளது.
‘ மனோ ரூபம்’ என்று சொல்லக்கூடிய சூட்சம சரீரம் இதுவே ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் ஸ்தூல ரூப காட்சியாக வெளிப்படுகிறது அதுவே கனவு நிலையில் சூட்சம ரூப காட்சியாகவும் செயல்படுகிறது. விழிப்பு நிலையும் கனவு நிலையும் ஒடுங்கிய ஆழ்ந்த நித்திரையில், மனம் ஒடுங்க பெற்ற நிலையில் மனம் அடங்கப்பெற்ற உருவமற்ற காரண சரீரமாகவும் இருக்கிறது. இம்மூன்றும் சேர்ந்ததே ‘ நான்’ என்பதாகும்.
ஆனால் வாஸ்துவத்தில் இம்மூன்றும் சேர்ந்த நான் ஒருபோதும் எவரிடத்தும் வெளிப்படுவதில்லை. அதாவது ஸ்தூல தேகத்தை விழிப்பு நிலையில் நான் என்று சொல்லிக் கொள்ளும் போது, மனோ ரூபமான சூட்சம சரீரமான நான் இவ்வுடம்பை விட்டு வெளியிலேயே சதா சுற்றி கொண்டிருக்கிறது. அந்நிலையில் உருவமற்ற காரண சரீரம் ஆகிய நான் அறியப்படாமலேயே இருக்கிறது. அதாவது மூன்றில் ஒரு பகுதி நான் மட்டுமே விழிப்பு நிலையில் ஒவ்வொருவரிடமும் தொடர்கிறது.
அதுபோன்றே கனவு நிலையில் மனோ ரூபமான நான் மட்டுமே வெளிபட்டுக் கொண்டிருக்க மற்ற இரண்டு தன்மைகளின் நான் என்பது அந்நிலையிலேயும் மறைந்து ஒரு பகுதி மட்டுமே காணப்படுகிறது.
ஆழ்ந்த உறக்க நிலையில் உருவமற்ற காரண சரீரமான நான் மட்டுமே வெளிப்படும் அந்நிலையிலேயும் மற்ற இரண்டு தன்மைகளின் நான் என்பதும் மறைந்து ஒரு பகுதி மட்டுமே அறியாமல் உணரப்படுகிறது
ஆக எந்தவொரு மனிதனும், இம்மூன்று தன்மைகளும் சேர்ந்த முழுமையான நானாக தன்னை ஒருபோதும் அறிந்ததும் இல்லை, தன்னைத்தான் அவ்வாறு பார்த்ததும் இல்லை.
எவரொருவர் தன்னை ஸ்தூல, சூட்சம காரண சரீரம் என்னும் இம்மூன்றும் சேர்ந்த முழு நானாக தன்னை உணர்ந்து பார்க்கின்றாரோ, அக்கணமே அவர் நான்காம் நிலையாகிய ஓம் என்னும் பிரணவ சொரூபத்தை அடைகிறார்.
அதனால் தான் சான்றோர்கள் ஸ்தூல,சூட்சம காரண சரீரம் என்னும் இம்மூன்று தன்மைகளையும் ஒன்றிணைக்க, அ, ஹூ, இ என்னும் சப்தத்தை உள்ளடக்கிய வார்த்தைகளைக் கொண்டு மந்திரமாக்கி, அதில் இம்மூன்று தன்மைகளையும் முறையே வெளி உடம்பாகிய ஸ்தூல சரீரத்திலும், உள் உடம்பாகிய காரண சரீரத்திலும், இடை உடம்பாகிய சூட்சும சரீரத்திலும் முறைப்படி பொருத்தி, அதில் இடையாகிய ஹூ என்னும் மந்திர சப்தம் உள்ளடங்க உள்ளடங்க, மாறு கொண்ட ஹூ வில் மடிந்ததே சிவாயமே என்னும் சிவவாக்கியரின் சொல்லுக்கு ஏற்ப, அழிக்கும் தன்மை கொண்ட மனமானது முற்றிலும் நசிந்து போய்…
ஸ்தூல,சூட்சம, காரண சரீரம் என்னும் இம்மூன்று தன்மைகளும் சேர்ந்து ஒரே நானாகி வெளிப்படும் போதுதான் தன்னையே தான் ஒருவர் முழுமையாக பார்க்கவும் தன்னோடு தான் இடைவிடாது பேசவும் இயலும். மேலும் அவ்வாறு தன்னையே தான் ஒருவர் பார்க்கும் போது அனைத்துமே தானாகி நிற்க காணலாம். மேலும் அதுவே ஓம்காரம் என்னும் பிரணவ ஜோதியாக, சிவனருள் கூடி, அச்சிவலோகத்தில் ஒன்றாகலாம் என்ற மெய்ப்பொருளை நமக்கு காட்டியுள்ளார்கள்.
பிரச்னோ உபநிஷத்:5.6 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. “ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளான அ, ஹூ, இ தனித்தனியே உபாசிக்கப்பட்டால், அவை அழியும் பலனைத் தருபவை. மூன்றும் சேர்த்து உபாசிக்கப்பட்டால், அவை அங்ஙனமாகா” என்று.
“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை”. என்று வள்ளுவர் பெருமானும் இம்மெய்ப்பொருளை உள்ளடக்கிய திருக்குறளை உலகிற்கு அளித்துள்ளார்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

