
இன்று உலக தந்தையர் தினம், அதைப் பற்றிய ஒரு சிறிய கட்டுரை இது.

“பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் – நீ
ஒருவனை நம்பி வந்தாயோ? – இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ? ” என்று கவிஞர் கண்ணதாசன் பாடல் ஒன்று உண்டு.

அவ்வகையில் தற்போது உலகில் வாழும் அனைத்து மனித குலத்திற்கும் ஒரே தந்தையாக விளங்கிக் கொண்டிருப்பது அவரவர்களிடமிருந்து இடைவிடாது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தூய உணர்வே ஆகும். ஏனெனில் ஆதியில் இருந்தது நாதமயமான தூய உணர்வே. இதுவே விந்துவுடன் கலந்து நாத விந்துவாகி ஒவ்வொரு மானுட யாக்கையின் உருவாக்கத்திற்கும் காரணமாக இருந்து கொண்டிருக்கிறது.

மேலும்,
“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“. என்பது வள்ளுவரின் ஒரு திருக்குறள்.
இங்கு வள்ளுவர் பெருமான், சாக்காடு என்னும் இறப்பையும் பிறப்பையும், உறக்கம் மற்றும்விழிப்பு நிலைகளோடு ஏன் ஒப்பிடுகிறார் ?

இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மானிடர்க்கும் உறக்கம் மற்றும்விழிப்பு ஒரேயொருமுறை மட்டும் வருவதில்லை. மீண்டும் மீண்டும் உறக்கம் மீண்டும் மீண்டும் விழிப்பு என்று மாறி மாறி வந்து கொண்டேஇருக்கும். அதுபோல இறப்பும் பிறப்பும் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் (மானிடவர்க்கம் உள்பட) மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.
மேலும் உறக்கம் மற்றும் விழிப்பு நிலைகளில் ஒன்றுக்கொன்று தொடர்பு என்பதும் இல்லை. அதாவது உறங்கச் செல்லுமுன் தம் உணர்வில் இருக்கும் space and time அதாவது இருப்பிடமும் காலமும் ஆழ்ந்த உறக்க நிலையில் உணரப்படுவதில்லை….
உறக்கம் கலைந்த விழிப்பு நிலையில் தம் இருப்பிடமும் (space) ,காலமும் (time) மீண்டும் புதியதாகவே உணரப்படுகிறது. இது ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கும் நிகழ்வாகும்.
அது போல ஒருவர் இறக்கும் வரை….. நினைவில் இருக்கும் சூழலும்,காலமும் இறந்த நிலையில் அறியப்படுவதில்லை. மீண்டும் பிறந்த நிலையில் இருப்பிடமும் (space) ,காலமும் (time) புதியதாகவே உணரப்படுகிறது.

அவ்வகையில் ஒவ்வொருவருக்கும் உறக்கத்திலிருந்து விழித்து எழுந்தவுடன் வெளிப்படும் முதல் உணர்வானது, இருப்பிடத்தையும் (space) காலத்தையும் (time) மீண்டும் புதியதாக அவர்களுக்கு உணர்த்தும், புதிய பிறப்பாக ஆகிப்போய், அன்றைய தினம் என்பது தந்தையர் தினமாகவும் ஆகி, தினந்தோறும் ஒவ்வொருவராலும் கடைப்பிடிக்கப்படும் தினமாக இருந்து கொண்டிருக்கிறது ஆனால் அவர்கள் அறியாமலேயே!

“தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பது அவ்வையின் கூற்று. அதே வகையில் திருமூலர் நாயனார் இத்தூய உணர்வையே பஞ்சாட்சர சொல்லாக்கி, “ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்” ஆக, அதாவது தம் உடம்பிற்கு நிரந்தர தந்தையாக்கி, “சிவாய நம” என்னும் நாமத்தால் இடைவிடாது சிந்தித்து, பேரின்பப் பயனைப் பெற்றார்.

அதாவது கவிஞர் கண்ணதாசன் பாடலில் சொல்லியுள்ள படி, உடம்பின் வழியாக அறியப்பட்ட ஒரு தந்தையை மட்டும் நம்பியிராமல், உயிரின் வழியாக நம் எல்லோருக்கும் தந்தையாக விளங்கிக் கொண்டிருக்கும் ‘தூய உணர்வை’ முறையாக அறிந்து, உணர்ந்து, அதை மந்திரமாக்கிக் கொண்டால், ஒவ்வொருவரும் இப்பேரின்ப பேற்றைப் பெறலாம்!
திருச்சிற்றம்பலம் 🙏

