
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒன் ஞான பூசை
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை உயிர் பெறும் ஆவாகனம் புற பூசை
செயற் இடை நேசம் சிவபூசை தானே.

உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒன் ஞான பூசை :
சுட்டும் தன்மை மறந்த நிலையில் நிற்றல், அதாவது தனக்கு அன்னியமாக ஏதும் இல்லை என்னும் உணர்வில் தன்னில் தானாகவே இருத்தல், இந்நிலையானது ஒவ்வொருவரின் ஆழ்ந்த நித்திரை நிலையில் இயல்பாகவே உணரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிலையில் உயிரால் உயிரானது இடைவிடாது வணங்கப்பட்டுக் கொண்டிருக்கும். இதே நிலையை ஒருவர் தம் விழிப்பிலும் தொடர்ந்து கொண்டு வந்தால் அதுவே அவரின் ஞான பூசை ஆகிறது.
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை:
ஞான பூசையின் பலனாக ஞான ஒளி பிரகாசிக்க, அதன் மூலம் உயிரானது தொடர்ந்து நோக்கப்படும் போது அது மகா யோக பூசையாக ஆகிறது.
உயிர் பெறும் ஆவாகனம் புற பூசை: இவ்வாறு உயிரால் உயிர் பெற்ற ஒளி சக்தியானது, அது குடி கொண்டிருக்கும் தேகம் முழுவதும் ஆவாகனமாகி வியாபிக்கும் போது, அதுவே புற பூசை ஆகிறது.
செயற் இடை நேசம் சிவபூசை தானே:
இவ்வாறு உயிர் உடம்பு இவ்விரண்டின் இடையே நேசத்துடன் நிகழும் செயல்பாட்டின் மூலம், உயிரால் உடம்பும், உடம்பால் உயிரும் ஒன்றினால் ஒன்று மகிமை பெற்று ஒளிரும் போது, அது மிகச் சிறந்த சிவ பூசையாக அமைந்துவிடும்.
திருச்சிற்றம்பலம் 🙏

