திருமூலர் திருமந்திரம் உரை எண் 7 ன் விளக்கம்:


முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாஎனில் அப்பனு மாயஉளன்  பொன்னைஒப் பாகின்ற போதுஅகத் தானே.


முன்னை ஒப்பாய் உள்ள மூவர்க்கு மூத்தவன்:
ஆதியில் இருந்தது பிரணவசப்தம் ஒன்றே. மூவர் என்பது ‘இருக்கிறேன்’ என்னும் ஒவ்வொருவரின் உணர்வில் அடங்கியுள்ள தாய், தந்தை, மற்றும் அவரவர்கள், என்னும் மூன்றின் தன்மைகளை கொண்டது. இம் மூன்றும் சேர்ந்த ஒரே தன்மையாக, ஆனால் இம்-மூவர்க்கும் மூத்தவனாக, சப்த பிரம்மமாக அது ஆதியில் இருந்தே இருக்கிறது.


தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன் :
ஆதியும் அந்தமும் இல்லாததாக இருப்பதால், அது தனக்கு இணையாக, ஒப்பாக வேறு ஏதும் இல்லாததாய் தன்னில் தானாகவே இருக்கிறது.


தன்னைஅப் பாஎனில் அப்பனு மாயஉளன் :
அதாவது ஒருவர் “தன்னால் பிறப்பிக்கப்பட்டவர் யாரும் இல்லை, அது போல தன்னை பிறப்பித்தவரும் எவரும் இல்லை” என்னும் இம்மெய்ஞானம் கிட்டி, அவ்வுணர்வோடு நாத பிரம்மத்தை அப்பா எனில், அது அப்பனுமாய் ஆகி,


பொன்னைஒப் பாகின்ற போதுஅகத் தானே:
பொன் தான் அனைத்திற்கும் ஒப்பாக சொல்லப்படுமே தவிர, பொன் அதுவே எதற்கும் ஒப்பாக  ஆகாது. இவ்வாறு அப்பனுமானவன், அவரவர் அகத்துக்குள்ளே எவ்வாறு பொன்னானது மாசில்லாமல் எக்காலத்தும் ஜொலித்துக்  கொண்டே இருக்குமோ, அவ்வாறே மாசற்ற ஜோதியாக அவரவர்  அகத்துக்குள்ளே அப்பனாக என்றன்றும் பிரகாசித்துக் கொண்டே இருப்பான்.
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment