
That which is the cause of all actions is shining within each one as God, Guru, or Soul.
எல்லாச் செயல்களுக்கும் காரணம் எதுவோ? அதுவே ஒவ்வொருவருக்குள்ளும் கடவுளாகவோ, குருவாகவோ, ஆத்மாவாகவோ பிரகாசிக்கிறது.
‘நான்’ அதாவது ‘நான் செய்கிறேன்’ எண்ணத்துடனேயே ஒவ்வொரு செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ‘நான்’ என்பதே அனைத்து செயல்களுக்கும் காரணமாக இருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.
அவ்வகையில் ‘நான்’ என்பதே ஒவ்வொருவரின் கடவுள், குரு, மற்றும் ஆன்மாவாக ஆகிறது. ‘அஹம், நான்’ என்பதாகவே பிரம்மம் ஒவ்வொருவரின் ஹ்ருதயத்துக்குள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது என்று யஜுர்வேதமும் இதை உறுதி செய்கிறது.
இந்த ‘அஹம் என்னும் நான்’ ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் ‘பார்க்கும் திறனாகவும்’, கனவு நிலையில் ‘நினைவின் திறனாகவும்’, ஆழ்ந்த நித்திரையில் ‘பிராணனின் திறனாகவும்’ மாறி மாறி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் இத்தகைய மூன்று திறன்களையும் அதாவது பார்க்கும் திறன், நினைக்கும் திறன், மற்றும் பிராணனின் திறன் என்னும் இம்மூன்று திறன்களையும் ஒரே உணர்வாக கொண்டு வரும்போது, அத்தகையவர் ‘சாக்கிரம் எனும் விழிப்பு, கனவு, உறக்கம்’ என்னும் இம்மூன்று நிலைகளிலும் கடந்து, துரியத்தையும் கடந்த தொண்டராவார்.
துரியம் கடந்த இத்தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் நின்றது என்று உந்தீபற
துறந்தார் அவர்கள் என்று உந்தீபற“.
என்பது திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய திரு உந்தியார். பாடல் 32.
“துரியமும் கடந்த சுக பூரணம்தரும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி” என்னும் வள்ளல் பெருமானின் அகவல் பாடலின் படி, ‘துரியம்’ கடந்த அந்நிலையில் ‘சாக்கிரம்’ துரியமாக, அதாவது ‘துரியாதீதம்’ என்னும் அந்நிலைக்கு துணையாக… அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றல் நின்றால் தான்?
-காற்றின் தன்மையால் கற்பூரத்தின் உருவம் முழுவதும் கரைந்து மறைந்தே போய்விடுவது போன்று… அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசத்தால் இவ் அணுக்கத் தொண்டர்கள் தம் உருவம் முழுவதையும் சிவ ஜோதியில் துறந்து பரிபூரண சுகத்தை எய்துவார்கள்!
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

