“சனாதனா” என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், இது நிரந்தரமானது, என்றென்றும் உள்ளது, மற்றும் நித்தியமானது என்று பொருள்கள் உள்ளன.

“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு“.
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு சொல்ல வந்த மெய்ப்பொருள் யாதெனின் ?
இம்மானுட தேகத்தில் தற்பொழுது குடிகொண்டுள்ள உயிரானது இதற்கு முன்னரும் நிலையான வீடுபேரு பெற தேடித்தேடி, பற்பல தேகங்களை நாடி நாடி அலைந்துள்ளது என்பது புலனாகின்றது. அவ்வாறு நாடி நாடிச்சென்ற பிறவிகளில் தாவரங்கள், விலங்குகள், பறப்பன, ஊர்வன போன்ற வடிவங்களும் அடங்கும். ஆறறிவுக்கும் கீழான அப்பிறவிகளில் (அவ்வடிவங்களில்) அதுவரை குடிகொண்டிறிந்த இவ் உயிரினால் தமக்கு ஒரு நிலையான வீட்டினை உருவாக்கி கொள்ள இயலவே இயலாது.
ஒரு வேளை எடுத்துள்ள இப்பிறவிக்கு முன்னர் இவ்வுயிரானது உருவாகவேயில்லையெனின், அல்லது இப்பிறவிக்கு பின்னர் வேறு உடல் தேடி வேறெங்கும் செல்லாதெனின், அதாவது முற்பிறவியும் இல்லை மறுபிறவியும் இல்லையெனின்…
‘உயிருக்கு ஓர் நிலையான இருப்பிடம் வேண்டும்’ என்னும் பொருள் கொண்ட இக்குறளை வள்ளுவர் பெருமான் உலகிற்கு அளித்திருக்க மாட்டார்.
அதாவது “அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது“ என்னும் அவ்வை பிராட்டியின் வாக்கிற்கேற்ப அரிதிலும் அரிதான இம்மானுட பிறவி கிடைக்கப்பெற்ற உயிரினால்தான் தான் தற்பொழுது குடிகொண்டுள்ள இத்தேகத்தையே “சனாதன” இருப்பிடமாக, அதாவது நிரந்தரமான, என்றென்றும் அழியாத, நித்தியமான இருப்பிடமாக ஆக்கிக்கொள்ள இயலும்!
“மனித்த உடம்பிதை அழியா வாய்மை உடம்பாக்கி” என்று அருட்பராகாச வள்ளலாரும் தாம் அடைந்த இந்நிலைப்பேற்றை அனுபவித்து வர்ணித்துள்ளார்.
“உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே“
என்பது திருமூலரின் திருமந்திரச் சொல். அதாவது அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மானுட தேகத்தை தம் நிலையான வீடாக (இருப்பிடமாக ) ஆக்கிக்கொள்ள முயலாத, இயலாத உயிர்கள் எவ்வாறு கடலில் அகப்பட்ட கட்டையானது காற்றலை அடிக்கும் திசையெல்லாம் போய்கொண்டே இருக்குமோ, அவ்வாறே இவ் உயிர்களும் நிலையான வீடின்றி திரிந்து கொண்டே இருக்கும்.
இத்தகைய “சனாதனம்” என்னும் ‘நிரந்தரமான, நித்தியமான மற்றும் என்றென்றும் அழியாத’ பெரும்பேற்றை அடைந்த திருவள்ளுவர், அவ்வை பிராட்டியார், திருமூலர், தற்காலத்தில் வாழ்ந்த வள்ளல் பெருமான் போன்ற சான்றோர்களால் எவ்வித ஜாதி, மத பாகுபாடு ஏதும் இல்லாமல், இம்-மனிதகுலம் உய்வடைய மட்டுமே போதிக்கப்பட்ட நடைமுறை வழிகளே “சனாதன தர்மம்” ஆகும்.
“சனாதன தர்மம்” இத்தகைய ரீதியில் மனித குலத்தால் கடைப்பிடிக்கப்பட்டால்? எல்லா வேறுபாடுகளும் மறைந்து போய், திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்று, அதாவது மனிதகுலம் முழுவதும் ஒன்றாக தேவனும் ஒன்றாக காணலாம்.
வாழ்க வள்ளுவம் 🙏 வாழ்க தமிழ் 🙏

