தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்தான்: ஹதீஸ்

தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்தான்:

மனித வடிவம் : மாறாத இறை ஆற்றலின் ஒரு வடிவம்:

பிரபஞ்சம் ஒரு முழுமையான அமைப்பாகக் கருதப்படுகிறது. இயற்பியலின் ஆற்றல் நிலைத்தன்மைக் கோட்பாட்டின்படி, தனிமைப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பில் மொத்த ஆற்றலைப் புதிதாக உருவாக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால், ஆற்றல் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறிக்கொண்டே இருக்கும்.

ஆற்றலின் மாற்றம் என்பது இயற்கையின் அடிப்படை விதிகளில் ஒன்று. இந்த மாற்றம் இடைவிடாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கோள்களின் உருவாக்கமும் இயக்கமும், பகல் இரவுகளின் தொடர்ச்சியும், பருவங்களின் மாறுதலும், உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, மறைதல் என நம் கண்களுக்குப் புலப்படும் மற்றும் புலப்படாத எண்ணற்ற நிகழ்வுகள் அனைத்தும் இயற்கையின் தொடர்ச்சியான மாற்றங்களின் வெளிப்பாடுகளே ஆகும்.

இவ்வாறு எண்ணற்ற வடிவங்களிலும் மாற்றங்களிலும் வெளிப்பட்டாலும், அவற்றின் பின்னணியில் ஒரே முழுமையான யதார்த்தம் நிலவுகிறது என்ற ஆன்மிகப் பார்வையை இஸ்லாமிய சூஃபி ஞான மரபில் காணலாம்.

இந்த ஆன்மிகப் பார்வையில், அல்லாஹ் என்பது பிரபஞ்சத்தின் முழுமைக்கும் அப்பாற்பட்ட, அதனைத் தாங்கி நிற்கும் உருவமற்ற பரம்பொருளைக் குறிக்கிறது. பிரபஞ்சத்தின் எண்ணற்ற இயக்கங்களும் மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டிருந்தாலும், அவற்றின் ஆதாரமான இறை முழுமை மாறாததாகவே உள்ளது.
 

அதேபோல், மனித வடிவையும் அல்லாஹ்வின் குறியீடாகப் புரிந்துகொள்ளலாம். இந்த மனித வடிவம், தனக்குள் என்றும் மாறிக்கொண்டிருக்கும் ஆற்றலின் வெளிப்பாடுகளை உள்ளடக்கிய… ஒரு மூடிய அமைப்பாகும்

அல்லாஹ்வின் அருளால், ஒருவர் அல்லாஹ்வை வெறும் அறிவுசார் கருத்தாகப் பார்க்காமல், தன்னுடைய இருப்பின் ஆழத்தில் உணரப்படும் யதார்த்தமாக அறியும்போது, அவரிடம் ஒரு ஆழமான அகமாற்றம் நிகழ்கிறது.

அப்போது அவர் உணரத் தொடங்குகிறார்:
‘ ‘நான்’ என்பது தனித்துவமான ஒரு ஜீவன் என்ற அடையாளம் மட்டுமல்ல.
‘எனக்குள்’ நிகழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றும் அனைத்தும், இறை ஆற்றலின் தொடர்ச்சியான வெளிப்பாடுகளே.
இந்த உணர்தலின் மூலம், தன்னைப் பேராற்றலிலிருந்து தனித்தவனாக அடையாளப்படுத்திக்கொண்டதன் காரணமாக உருவான இருமை உணர்வு படிப்படியாகக் கரைகிறது.

ஒரு தனிப்பட்ட ஜீவன் என்ற உணர்விற்கு அப்பால், ஒருவர் தன்னைப் பேராற்றலின் மாறாத முழுமையின் ஒரு அம்சமாகவே உணர்கிறார். அதுவே விடுதலை பெற்ற வாழ்வின் இயல்பு நிலை… முக்த புருஷனின் நிலை.

நிறைவாக: உள்ளது ஒன்றே
உள்ளும் புறமும்… 
மூச்சை உள்ளிழுத்தலும், வெளிவிடுதலும்… 
உடலும் ஆன்மாவும்… 
இருப்பும் இல்லாமையும்… 
அறியப்படுவதும் அறிபவனும்… 
இத்தகைய இருமைகள் அனைத்தும் கரைந்து… உள்ளது ஒன்றே” என்பது மட்டுமே எஞ்சி நிற்கிறது. 

இவ்வாறு உடம்பிலும் உயிரிலும் பிரகாசிக்கும் மாறாத சக்தியின் கூட்டுத்தொகையாகத் தன்னை அறிவதே… இறைவனை முழுமையாக அறிந்ததற்கு ஒப்பாகும்…”Man ‘arafa nafsahu faqad ‘arafa rabbahu” அதாவது  “தன்னை அறிந்தவன் தன் இறைவனை அறிந்தான்”…  என்றே  ஹதீஸ் கூறுகிறது. 

Leave a Reply