ஆழ்ந்த நித்திரையும் இறை உணர்வும்…


கண்களை மூடுங்கள்…

உங்கள் சுவாசத்தின் மென்மையான ஓட்டத்தை மட்டும் கவனியுங்கள்.
நாம் விழித்திருக்கும் போது, நம்மைச் சுற்றி ஒரு பெரிய உலகம் இருக்கிறது. எண்ணங்கள், உருவங்கள், உறவுகள், கடமைகள் என அனைத்தும் நம் முன் விரிந்திருக்கின்றன. ஆனால், இரவு வந்து நாம் ஆழ்ந்த நித்திரையில் (சுஷுப்தி) ஆழும்போது என்ன நடக்கிறது?
அங்கே உலகம் இல்லை.
உடல் பற்றிய உணர்வு இல்லை.
நேற்று என்ற நினைவு இல்லை; நாளை என்ற கவலை இல்லை.

இதைத்தான் அஷ்டாவக்ர கீதையில் 20:14 ல், ரிஷி அஷ்டாவக்ரர் ஜனக மகரிஷிக்கு மிக நுட்பமாக உபதேசிக்கிறார்: “எனக்கு முன் ஏதுமே இல்லை” என்று.
ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவனுக்கு முன்பு எதுவுமே இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், அங்கே ‘எதுவுமே இல்லை’ என்பதை உணரும் அந்த ‘தூங்குபவன்’ இருக்கிறான்.

இங்கேதான் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ரகசியம் ஒளிந்திருக்கிறது.
அங்கே வெளி உலகம் ‘இல்லை’…
ஆனால், அதை உணரும் அந்தப் பேரறிவு ‘இருக்கிறது’.
“அவனை உறக்கமோ சிற்றுறக்கமோ ஆட்கொள்வதில்லை.”
அதாவது, மனிதன் உறங்குகிறான்; ஆனால் அல்லாஹ் உறங்குவதில்லை என்று திருக்குர்ஆனில்(2:255 ) மிக ஆழமான வசனம் ஒன்று உள்ளது.

இந்த ‘இருப்பு’ மற்றும் ‘இன்மை’ ஆகிய இரண்டும் இணையும் புள்ளியில்தான் இறைத்தன்மை வெளிப்படுகிறது. சூஃபி ஞான மரபில், ‘அல்லாஹ்’ என்ற திருநாமத்திற்கு மிக ஆழமான உட்பொருள் உண்டு. அதில் ‘அல்’ என்பது ‘இருக்கு’ (உள்ளது) என்பதையும், ‘லா’ என்பது ‘இல்லை’ என்பதையும் குறிக்கிறது.

மனிதனின் மாயைகள் அனைத்தும் உறக்கத்தில் கரைந்து ‘இல்லை’ (லா) ஆகிவிட, எஞ்சியிருக்கும் அந்தப் பரம்பொருள் மட்டுமே தூய விழிப்புணர்வாக ‘இருக்கிறது’ (அல்).

ஒவ்வொரு மனிதனும் தன் ஆழ்ந்த உறக்கத்தில், தன் அகங்காரத்தைத் துறந்து, இந்த ‘இருக்கும் – இல்லாத’ நிலைக்குத்தான் செல்கிறான். அங்கே ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை.

எனவே, ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்திருக்கும் ஒவ்வொரு மனிதனின் உருவமற்ற தன்மையும், அந்தப் பரம்பொருளின் வெளிப்பாடே… அல்லாஹ்வின் அருளே.

இன்று இரவு நீங்கள் உறங்கச் செல்லும்போது, வெறும் தூக்கத்திற்குள் செல்லவில்லை; அந்தப் பேரமைதியான இறை உணர்வுக்குள் கரையப் போகிறீர்கள் என்ற நம்பிக்கையோடு கண்களை மூடுங்கள். விடியல் அருளாக மலரும்.

Leave a Reply