
தெய்வீக சக்தி — “அதைத் தேடுங்கள்…” – பாகம் 2
“உங்களுக்குள் உங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தேடுங்கள்.” இது ஹஸ்ரத் ரூமியின் வாக்காகப் பரவலாகக் கூறப்படுகிறது.
ஒருவர் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், மனம் ,புத்தி, அகங்காரம், என்னும் எட்டு விதமான பிரகிருதியால் உருவான தேகத்துக்கும், பிராண அபானங்களுக்கும், உயிர் கொடுக்கும் (இயக்கும்) சக்தியாக விளங்கும் அந்த இயங்கு சக்தியை தன்னுள் முழுமையாக குரு அருளால் உணரப் பெறும் போது…
அண்டமும், அண்டத்தில் உள்ள அனைத்து கோள்களின் இயக்க சக்தியும், பஞ்சபூதங்களின் இயக்க சக்தியும், மனிதப்பிறவி உட்பட அனைத்து உயிரினங்களின் இயக்க சக்தியும், அந்த இயங்கு சக்தியாகவே வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை உணரலாம்.
அவ்வாறு உணரப்படும் போது பிண்டம் அண்டம் என்னும் வேறுபாடுகள் முற்றிலும் மறைந்து போக, பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தி உணர்வாய்… அனுபூதி நிலையாக மட்டுமே அனுபவிக்கப்படும்.
இந்த அனுபூதி நிலையை பற்றி பிரகதாரண்யக உபநிடதம்:4:3:23-30 ல், ரிஷி யாக்யவல்க்கியரின் உபதேசம்:
அது அனைத்து ஆசைகளையும் கடந்த, பாவங்கள் அற்ற, பயமற்ற நிலையாகும். அன்புமிக்க மனைவியால் தழுவப்பெற்ற ஒருவன் எப்படி வெளியிலும் உள்ளேயும் வேறு எதையும் அறிவதில்லையோ, அது போலவே இந்த நிலையில் ஜீவாத்மா பரமாத்மாவால் தழுவ பெற்று புறத்திலும் அகத்திலும் வேறு எதையும் அறிவதில்லை. எல்லா ஆசைகளும் நிறைவேறப்பெற்ற பரமாத்மாவையே ஆசையாக கொண்ட, ஆசைகள் அற்ற, கவலைகளைக் கடந்த நிலை அது.’
‘அந்த அறுதி அனுபூதி நிலையில் தந்தை, தந்தையல்ல; தாய், தாயல்ல; உலகங்கள், உலகங்கள் அல்ல; தெய்வங்கள், தெய்வங்கள் அல்ல; வேதங்கள், வேதங்கள் அல்ல; திருடன், திருடன் அல்ல; கொலைகாரன், கொலைகாரன் அல்ல; சண்டாளன், சண்டாளன் அல்ல; இழிந்தவன், இழிந்தவன் அல்ல; துறவி, துறவி அல்ல; தபஸ்வி, தபஸ்வி அல்ல; இந்த நிலை புண்ணியத்தால் தொடப்படுவதில்லை; அதுபோலவே, பாவத்தாலும் தொடப்படுவதில்லை. ஏனெனில் அந்த நிலையில் ஜீவாத்மா மனத்தின் எல்லா உணர்ச்சிகளையும் கடந்தவனாக இருக்கிறான்.’
‘அந்த அனுபூதி நிலையில் (இயங்கு சக்தியாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்) ஆன்மாவானது, எதையும் பார்ப்பதில்லை; பார்த்தாலும் பார்ப்பதில்லை. ஆனால் பார்ப்பவனின் காட்சி தடைபடுவதில்லை. ஏனெனில் பார்ப்பவனாகிய அந்த இயங்கு சக்தி அழிவற்றது. அது பார்ப்பதற்கு இரண்டாவதாக தனியாக ஒன்று அங்கே இல்லை.’
அதுபோன்றே எதையும் சுவைப்பதில்லை; சுவைத்தாலும் சுவைப்பதில்லை.
எதையும் பேசுவதில்லை; பேசினாலும் பேசுவதில்லை.
எதையும் சிந்திப்பதில்லை; சிந்தித்தாலும் சிந்திப்பதில்லை.
எதையும் தொடுவதில்லை; தொட்டாலும் தொடுவதில்லை
எதையும் அறிவதில்லை; அறிந்தாலும் அறிவதில்லை.
தண்ணீர் எப்படி பிளவுபடாமல் எப்போதும் ஒன்றாக இருக்குமோ அத்தகைய நிலை இது. இந்த நிலையை அனுபவித்தவன் இரண்டற்றவன் ஆகிறான்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
இயக்கம் என்பது நாம் காணும் நிகழ்வு;
இயங்கு சக்தி என்பது அந்த இயக்கத்தை நிகழச் செய்யும் சக்தி.
உதாரணமாக, இதயம் துடிக்கிறது — இது நிகழும் இயக்கம்.
ஆனால், “இந்தத் துடிப்பை நிகழச் செய்வது என்ன?” என்று நாம் கேட்கும்போது, அது வெறும் இயக்கத்தை விட ஆழமான கேள்வியாகிறது.

