காலக் கணக்கும் ஆன்மீகத் தத்துவமும்:

காலக் கணக்கும் ஆன்மீகத் தத்துவமும்:

அருணகிரிநாதரும் திருமூலரும்:
தமிழின் ஆன்மீக இலக்கியப் பொக்கிஷங்களில், அருணகிரிநாதரின் திருப்புகழ் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. அதில் இடம்பெறும்,
“நாத விந்து கலாதீ நமோநம:”
என்ற புகழ்பெற்ற வரி, மிகச் சிறிய சொற்களுக்குள் மனிதப் பிறவியின் தோற்றம், அறிவின் வெளிப்பாடு, அருள் மற்றும் ஆன்மீகப் பரிணாமம் ஆகியவற்றைப் பற்றிய ஆழமான சிந்தனையைத் தூண்டுகிறது.

இந்த வரியில் இடம்பெறும் சொற்களை ஆன்மீக நோக்கில் அணுகும்போது, அவை பல அடுக்குகளைக் கொண்ட பொருள்களை வெளிப்படுத்துகின்றன.

நாதம் — காற்றினில் கலந்த ஓசை; உயிர் மூச்சின் ஓசை.
விந்து — ஆணிடமிருந்து பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செல்லும் உயிரணு.
கலா — கலத்தல், கூடுதல்.
தீ — அறிவு.
நமோ — காண்க.
நம: — வணக்கம்.

இவ்வாறு பார்க்கும்போது, மனிதப் பிறவியின் தொடக்கமே நாதமும் விந்துவும் ஒன்றிணையும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஒரு ஆணின் உடம்பிலிருந்து பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செல்லும் விந்தணுவில், மூச்சுக்காற்றுக்குள் பொருந்திய ஓசையான நாதம் இரண்டறக் கலந்து, காலப்போக்கில் ஆறறிவு கொண்ட மனித உருவாகப் பரிணமிக்கிறது.

தாயின் கருவறையிலிருந்து வெளிப்பட்டு, காணப்படுகின்ற ஒவ்வொரு மானுட யாக்கையும் — முருகப்பெருமானின் அருள் வடிவமே என்ற உணர்வு இங்கு முன்வைக்கப்படுகிறது.

அந்த உணர்வு பிறக்கும் போது, மனித உடல் வெறும் உடலாகத் தெரியாது.

அது வணக்கத்திற்குரிய அருள் வடிவமாக விளங்குகிறது.

காலக் கணக்கின் தொடக்கம்:
இந்தக் கருத்தின்படி, நாதமும் விந்துவும் கலந்த அந்தக் கணத்திலிருந்தே இப்பிறவியின் காலக் கணக்கு தொடங்குகிறது.

பிறப்பு முதல் மரணம் வரை நகரும் காலம் என்பது வெறும் ஆண்டுகளின் கணக்கு அல்ல.

அது தன்னை அறிந்து கொள்வதற்காக மனிதனுக்கு வழங்கப்பட்ட ஒரு அரிய வாய்ப்பாகும்.

இந்த வாய்ப்பை உணர்ந்தவன், தன் வடிவம் ஆறறிவு கொண்ட அருள் வடிவம் என்பதை உணரத் தொடங்குகிறான்.

அங்கேதான் திருமூலரின் ஞானவாக்கு பொருள் பெறுகிறது:
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை.”

தன்னை அறிதல் என்பது உடலை மட்டும் அறிதல் அல்ல.

தன் உண்மையான இருப்பின் தன்மையை அறிதல்.

தன் உள்ளத்தில் விளங்கும் அறிவின் ஆதாரத்தை உணர்தல்.

தன் வாழ்வில் அருளின் செயல்பாட்டை , ஒளியில் ஓசை அடங்கப் பெறுவதை, அதாவது விந்துவில் நாதத்தின் ஒடுங்குதலை உணர்தல்.

இந்த உணர்வு ஆழமடையும் போது, காலத்தால் கட்டுப்பட்ட வாழ்க்கை, அருளின் பரிமாணத்திற்குள் நுழைகிறது.

இதுவே இங்கு “அருள் கணக்கு” எனக் குறிப்பிடப்படுகிறது.

அதாவது, காலத்தால் முடிவுறும் கணக்கு, அருளின் வழியில், ஒளியில் ஓசை அடங்கப் பெற்று, முடிவற்ற ஆன்மீகப் பயணமாக மாறுகிறது.

மருள் கணக்கு:
இதற்கு மாறாக, மனிதப் பிறவியின் அருமையையும், தன் உண்மையான வடிவத்தையும் அறியாமல் வாழ்பவன், அறியாமையின் பிடியில் தொடர்ந்து சிக்கிக் கொண்டே இருக்கிறான்.

திருமூலரின் மற்றொரு எச்சரிக்கை:
“தன்னை யறியாமல் தானே கெடுகின்றான்.”

அரிதாக கிடைக்கப்பெற்ற ஆறறிவு கொண்ட அருள் வடிவான மனித உருவை தானே சிறுக சிறுக கெடுத்துக் கொள்வதால், முருகப்பெருமானின் அருளால் விந்துவில் நாதமாக கலந்த மூச்சுக்காற்றின் ஓசையானது, மாறுபட்டு, வெளிவிடும் ஒவ்வொரு மூச்சின் வழியே விந்துவின் ஒளியிலிருந்து சிறிது சிறிதாக விலகி, முற்றிலுமாக தொடர்பு அறுபட்டு போகும்போது இப்பிறவியின் காலக்கணக்கு முடிந்து, அதாவது இவ் உடம்பை விட்டு விலகி,

அதன் பின்னர், ஆன்மீக அறியாமை நீங்காத நிலையில், பிறவித் தொடர்ச்சி நீடிக்கிறது என்ற சித்தர் மரபின் கருத்து இங்கு முன்வைக்கப்படுகிறது.

இவ்வாறு தொடரும் கணக்கே இங்கு “மருள் கணக்கு” எனப்படுகிறது.

இதனை திருமூலரின்,
“கடலில் அகப்பட்ட கட்டையை ஒத்தாரே”
என்ற உவமை நினைவூட்டுகிறது.

அளவற்ற கடலில் அகப்பட்ட ஒரு மரக்கட்டை, தன் விருப்பப்படி எந்தத் திசையிலும் செல்ல முடியாது.

அலைகள் அதை இங்கும் அங்குமாகத் தள்ளிச் செல்கின்றன.

அதேபோல், தன்னை அறியாத உயிர், பிறவிப் பெருங்கடலில் அலைக்கழிக்கப்படுகிறது என்ற ஆன்மீகப் பொருள் இங்கு வெளிப்படுகிறது.

மனிதப் பிறவியின் அருமை:
இதன் மையச் செய்தி மிகவும் எளிமையானது.
மனிதப் பிறவி என்பது வெறும் வாழ்வதற்காகக் கிடைத்தது அல்ல.
அது…
தன்னை அறிய.
அருளை உணர.
விழிப்புணர்வுடன் வாழ.
பிறவியின் நோக்கத்தை உணர.
காலக்கணக்கில் கட்டுப்பட்ட வாழ்க்கையை அருள் கணக்கின் வழியில் உயர்த்த.
கிடைத்த அரிய வாய்ப்பு.

திருவள்ளுவர் பெருமானும் தம் திருக்குறள் 442 ல்,
‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரத்தில்
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

அதாவது, முடிக்கப்படாத காலக்கணக்கினால் உருவாகும் தொடர் பிறவி துன்பத்தை இப்பிறவியிலேயே நீக்கி, இனி இத்துன்பம் வராதபடி முன்னதாகவே, காலக்கணக்கை அருள் கணக்காக மாற்றி காக்கவல்ல தன்மையுடைய பெரியாரைத் துணைக்கோடலாக கொண்டு போற்றி நட்புக் கொள்ள வேண்டும் என்னும் பொருள் பட, அருணகிரிநாதர் மற்றும் திருமூலரின் கூற்றுக்கு இக்குறள் மூலம் வலிமை சேர்த்துள்ளார்.

முடிவுரை :
ஆகவே, மனிதப் பிறவியின் உண்மையான பெருமை அதன் நீண்ட ஆயுளில் இல்லை.

அதன் விழிப்புணர்வில்தான் இருக்கிறது.

நாம் யார்?

இந்த உடலின் உள்ளே இயங்கும் உயிரின் இயல்பு என்ன?

மூச்சின் ஓசை எங்கிருந்து வருகிறது?

அறிவு எவ்வாறு வெளிப்படுகிறது?

இந்த மனித வடிவில் அருள் எவ்வாறு செயல்படுகிறது?

என்ற கேள்விகளை உள்ளார்ந்த விழிப்புணர்வுடன் ஆராயத் தொடங்கும்போது…

வாழ்க்கையின் பொருள் மாறத் தொடங்குகிறது.

அப்போது

காலக் கணக்கு — அருள் கணக்காகிறது.
விதி மதியால் வெல்லப்படுகிறது

மருள் விலகி…
விழிப்புணர்வு மலர்கிறது.

மனிதப் பிறவியின் அரிய வாய்ப்பை உணர்ந்து…

முருகப்பெருமானின் அருளை அறிந்துணர்ந்து…

நம் வடிவமே அருள் வடிவம் என்பதை உணர்ந்து…

விழிப்புணர்வுடன் வாழ்வோம்.

காலக் கணக்கை முடித்து…
முடிவில்லாத அருள் கணக்கில் நுழைவோம்.

ஶ்ரீ குருப்யோ நமஹ. 🙏

திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment