பைரவரின் அருள்- 1 – விஜ்ஞான பைரவ தந்திரம்: ஸ்லோகம் 1


संस्कृतम्
श्रीदेव्युवाच ।श्रुतं देव मया सर्वं रुद्रयामलसम्भवम् ।
त्रिकभेदमशेषेण सारात्सारविभागशः ॥ १ ॥
IAST Transliteration
śrī devy uvāca
śrutaṃ deva mayā sarvaṃ rudrayāmalasambhavam |
trikabhedam aśeṣeṇa sārāt sāra-vibhāgaśaḥ || 1 ||


பொருள்:
தேவி கூறினாள்:
“ஓ தேவா! ருத்ரயாமல ஆகமத்தில் தோன்றிய அனைத்து உபதேசங்களையும், திரிக சாஸ்திரத்தின் எல்லாப் பிரிவுகளையும், அவற்றின் சாரத்தின் சாரமாக விளக்கப்பட்டபடியும் நான் முழுமையாகக் கேட்டிருக்கிறேன்.”


பொருள் விளக்கம்:
காஷ்மீர் சைவத் தத்துவ நோக்கம்
இங்கு “திரிக” (Trika) என்பது மூன்று தனித்தனி பிரிவுகளை குறிப்பதல்ல; அது காஷ்மீர் சைவத்தின் முழுமையான தத்துவ அமைப்பைக் குறிக்கிறது.
அனுபவ ஞானப் பார்வை:
என் குரு அருளால் பெற்ற மெய்ஞான அனுபவத்தின் அடிப்படையில் விளக்கம் :


ஒவ்வொரு மனித தேகத்தின் தோற்றத்தின் ஆதாரமாக விளங்குவது விந்து சக்தி. அது Potential Energy (நிலையாற்றல்) ஆக இருந்து, ஒவ்வொருவரின் தேகத்தின் மத்தியில் அந்தர்யாமியாக ஒளிர்ந்திருந்து செயல்படுகிறது.
பகவான் ரமண மகரிஷியின் உபதேசத்தின்படி, பிராணனும் மனமும் ஒரே மூலத்திலிருந்து எழுகின்றன. அந்த மூல நிலையாற்றலாக விந்து சக்தியை அனுபவ ரீதியாகப் புரிந்துகொள்ளலாம். பிராணனும் மனமும் இயக்க ஆற்றல்களாக (Kinetic Energy) வெளிப்படுகின்றன.
இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, உயிர், உயிர்மூச்சு, மனம் ஆகிய மூன்று சக்திகளின் ஒருமைப்பாட்டை,(இம்மானுட தேகத்தை) ஒரு அனுபவ அடிப்படையிலான “திரிக” புரிதலாகக் காணலாம்.


எனினும், ஒருவர் திரிக சாஸ்திரத்தின் அனைத்துப் பிரிவுகளையும் அதன் சாரத்தையும் நூல் வழியாக அறிந்திருந்தாலும், இதே திரிக சைவ மரபை சேர்ந்த திருமூலர் கூறும்:
“எழுதாத புத்தகத்தின் ஏட்டின் பொருளை…”
என்ற உண்மையை உணர்ந்து, எழுதப்படாத புத்தகமாக விளங்கும் தனது உயிர், உயிர்மூச்சு, உடம்பு ஆகியவற்றின் மெய்ப்பொருளை அறியவில்லை என்றால், அந்த அறிவு முழுமையடையாது.


அதனால்தான் திருமூலர் மேலும் கூறுகிறார்:
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்.”
இந்த அடிப்படையில், விஜ்ஞான பைரவ தந்திரத்தின் முதல் ஸ்லோகம் வெறும் சாஸ்திர அறிவைச் சுட்டிக்காட்டுவதல்ல; அந்த அறிவு தன்னை அறியும் நேரடி அனுபவமாக மலர வேண்டும் என்பதற்கான முன்னுரையாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏


குறிப்பு: மேலுள்ள “அனுபவ ஞானப் பார்வை” பகுதி, Jaideva Singh மற்றும் KSTS உரையின் விளக்கத்தை கொண்டு, என் குரு அருளால் கிடைத்த அனுபவ ஞானத்தையும் கலந்து பகிரப்பட்ட ஆன்மீக விளக்கமாகும்.

Leave a comment