திருமூலரின் திருமந்திரம் உரை எண் 2816 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்கு உள்ளே விளக்கைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு
விளக்கு உடையான்கழல் மேவலும் ஆமே.”

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி:
ஒருவர் வில்வித்தையில் சிறந்தவராக தீர்மானிக்கப்படுவது, தன் இலக்கின் மையப் பகுதியை நோக்கி குறி தவறாது அம்பை செலுத்தும் விதத்தைக் கொண்டுதான்! ஆனால் இத்தகைய சிறந்தவரை விட மிக சிறந்தவராக வில் வித்தையில் கருதப்படுபவர், அவ்வாறு இலக்கின் மையப் பகுதியை நோக்கி முன்பே செலுத்தப்பட்ட அவ்,- அம்பின் மேல் மையப் பகுதியை மூன்றாகப் பிளந்து, அந்த இலக்கின் மையப் பகுதியை மீண்டும் சென்றடையும் விதத்தில் தன் அம்பை செலுத்துபவரே எனலாம்!!

அவ்வாறே ஒவ்வொருவர் உடம்பின் மையப் பகுதியில் ஆதி முதலே ஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் உயிர் வித்தை மூன்றாகப் பிளந்து, அதன் உள்ளிருக்கும் ஜோதியுள் ஜோதியாக விளங்கும் சுத்த சிவ ஜோதியை ஏற்றி…

விளக்கினுக்கு உள்ளே விளக்கைத் தூண்டி:
அவ்வாறு ஏற்றப்பட்ட ஜோதியுள் ஜோ ஜோதியான அந்த சுத்த சிவ ஜோதியை இடைவிடாது தூண்டி…

விளக்கில் விளக்கை விளக்க வல்லார்க்கு:
அவ்வாறு தூண்டப்பட்ட சுத்த சிவ ஜோதியுள், தன் உயிர் என்னும் ஆன்ம விளக்கை பற்றிய அறிவை அறிந்து தெளிவு அடைய வல்லார்க்கு

விளக்கு உடையான்கழல் மேவலும் ஆமே.:
“பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்
அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ் ஜோதி”
என்று வள்ளல் பெருமான் தன் அருட்பெருஞ்ஜோதி அகவலில் உரைத்தபடி, உயிர் என்னும் தன் ஆன்ம விளக்கை பற்றிய தெளிவை அருளிய, அவ்வறிவுக்கு அறிவாக விளங்கிக் கொண்டிருக்கும் சுத்த சிவ ஜோதி, அவ்- உயிரிலிருந்து வேறுபடாது, அதாவது வேறுபட்டு இருத்தல் என்பதை பற்றி அறிவே அற்ற நிலையில், பெரும் பொருளாய், பரம்பொருளாய் என்றென்றும் குடி கொண்டிருக்கும்.
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment