
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
திருமூலரின் திருமந்திர உரை எண் 1677 ன் விளக்கம்:
“உடலில் துவக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே”
ஆகா: என்பதற்கு வியப்புக்குறிப்பு; உடன்பாட்டுக் குறிப்பு; என்று பொருள். இவ் உயிருக்கு, அரிதிலும் அரிதாய், வியப்புக்குரியதாய் துவங்கிய மானுட வேடமானது, உயிரை விட்டு அகன்றால், “மானுட யாக்கை வடிவு சிவலிங்கம்” என்ற திருமூலரின் மற்றொரு திருமந்திர உரையின்படி, அதனுடைய வியக்க தகுந்த மானுட வேடம், அதாவது சிவலிங்கமாக விளங்கிய அதனுடைய வேடம் கழன்று போய் மண்ணோடு மண்ணாய் போய்விடும்.
உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்:
மத்தியார்ச்சுனம் என்பது திரு இடை மருதூர் ஸ்தலத்தின் மற்றொரு பெயராகும்.
ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ । என்பது அம்பிகையின் ஓர் நாமம். இதை பஞ்சகோஶ அந்தர ஸ்தி²தாயை நம꞉ என்று பதம் பிரித்துப் பொருள் கொண்டால்…
பஞ்சகோஶ – உடம்பில் உள்ள அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய ஆகிய க்ஷேத்ரம் என்னும் பொருள்படும் பஞ்ச கோசங்கள்
அந்தர – மத்தியில் க்ஷேத்ரக்ஞன் என்னும் பொருள்படும் உடலை அறிகின்ற, உடலுக்குள் இருக்கும் சாட்சி அல்லது ஆத்மாவாக,
ஸ்தி²தாயை – இருப்பவளுக்கு
நம꞉ – நமஸ்காரம் என்று பொருள்.
அம்பிகையின் இதே நாமம் திரு இடை மருதூர் மத்தியார்ச்சுனருக்கும், அதாவது சிவபெருமானுக்கும் பொருந்தும். அவ்வகையில் நம் ஒவ்வொருவரின் உடம்பின் மத்தியில் உள்ள நாபிக் கமலத்தில், மத்தியார்ச்சுனர் நம் ஒவ்வொருவர் உடலையும் அறிகின்ற ஆத்மாவாகவும், அதாவது க்ஷேத்ரக்ஞனாகவும், புறத்தில் மத்தியார்ச்சுன க்ஷேத்ரமாகவும், அதாவது ” உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்னும் திருமூலரின் திருமந்திர உரையின்படி ,மத்தியார்ச்சுனர் நம் ஆன்மாவாகவும், தேகமாகவும், மத்தியில், நாபிக் கமலத்தில் விளங்கிக் கொண்டு அருள் பாலித்து கொண்டிருக்கிறார்.
அவ்வகையில் உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார், அதாவது ஒவ்வொருவரின் உடலும் உயிரும், சிவமே, மத்தியார்ச்சுனரே என்ற உண்மையை உணர்ந்து கொள்ளாமல், உடல் வேறு உயிர் வேறு என்று கருதுபவர்கள், எவ்வாறு கடலில் அகப்பட்ட ஒரு கட்டையானது அலையடிக்கும் திசைகளில் அலைந்து கொண்டிருக்குமோ, அவ்வாறே , இவ் உயிருக்கு கிடைத்த தெய்வீக மானுட வேடம் கழன்று, அற்ப பிறவிகள் கொண்ட வெவ்வேறு வேடங்களை எடுத்துக்கொண்டு அங்கும் இங்குமாக அலைந்து கொண்டேயிருக்கும்.
அவ்வகையில் மத்தியார்ச்சுனாரான க்ஷேத்ர-க்ஷேத்ரக்ஞனே தன் உடலாகவும் உயிராகவும் இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து கொண்டு , இத் திரு இடை மருதூர் புண்ணிய ஸ்தலத்தை, தம் வாசஸ்தலமாக, கொண்டுள்ள யாவரும் பெரும் பேரு பெற்றவர்களே எனலாம்!!
திருச்சிற்றம்பலம், 🙏

