திருமூலர் திருமந்திரம் உரை எண் 114 ன் விளக்கம்:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“களிம்புஅறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்புஅறுத்தான். அருள் கண்விழிப் பித்துக்
களிம்பு அணுகாத கதிர்ஓளி காட்டிப்
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே”

.களிம்புஅறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி:
மனம் என்பது செப்பு பாத்திரத்திற்கு ஒப்பானது, எவ்வாறு செப்பு பாத்திரமானது வெளிக் காற்றினால் களிம்பு ஏறி மாசு படுகின்றதோ, அவ்வாறே ஒவ்வொருவரின் அகத்தினுள் இருக்கும் மனமானது  தவறான வெளி மூச்சுக்காற்றால் அழுக்கு ஏறி மாசுபடுகிறது. நெற்றிக்கண்ணுடைய சிவனின் முன் நிற்கும் எங்கள் நந்தியம் பெருமான்,  சிவனுக்கு நேர் எதிராக திரும்பி தம் உள் சுவாசத்தால் எங்கள் மனதில் படிந்த களிம்பு அறுத்தான்…

களிம்புஅறுத்தான். அருள் கண்விழிப் பித்து:
அதன் மூலம் மனதின் மூலக்களிம்பாய் எழும், அதாவது மும்மல மாயஎண்ணங்கள் தோன்ற மூல காரணமாக எழும் நான் என்னும் அகங்காரத்தை, தம் விழிப்புணர்வு என்னும் அருளால் போக்கி, அதாவது களிம்புஅறுத்து, எங்களை விழிப்படையச் செய்தான்…

களிம்பு அணுகாத கதிர்ஓளி காட்டி:
அவ்வாறு மனதில் மும்மல மாயஎண்ணங்கள் தோன்ற மூல காரணமாக எழும் நான் என்னும் அகங்காரமானது, அதாவது மூலக் களிம்பு மீண்டும் அணுகாதபடி இருக்க, எம்முள் விளங்கிய கதிர்ஓளி போன்ற சிவ ஜோதியை காட்டி…

பளிங்கில் பவளம் பதித்தான் பதியே:
அதன் வழியே பளிங்கு போன்றான என் மனதில் பவளம் போன்ற, சுய-இருப்பு, நித்தியம் மற்றும் முழுமையான இருப்பு ஆகியவற்றின் ஆழமான பிரகனடமாகிய, “இருக்கிறேன் நான்” என்னும் மிக உயர்ந்த சிவஞான போதத்தை பதித்தான் எம் நந்தியம் பெருமான்.
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment