“தெய்வம்- அதன் சொரூபம்”

“தெய்வம்- அதன் சொரூபம்”
யோக வாசிஷ்டம்  அத்தியாயம் 20 ல் தெய்வம் அதன் சொரூபத்தை பற்றி ஒரு விளக்கம் இருக்கிறது. நமக்கு வேண்டியதை தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடிமே தவிர வேறு ஒன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம் இதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். நம் முயற்சி இல்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்கு புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்கு பலனளிப்பதாக எண்ணுவது மூடத்தனம், இதைவிட அஞ்ஞானம் வேறில்லை.

நம்மால் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் நம் இந்திரியங்களால் செய்யப்பட வேண்டும். இந்திரியங்கள் மனத்தால் ஏவப்படுகின்றன,  மனது புத்தியின் அசைவு. நாம் அனுபவிப்பதெல்லாம் கிரியைகளின் பலனே. ஆகையால் புத்தியின் அசைவு தான் பலன். அது ரூபமாக அனுபவிக்கப்படுகிறது. நியதி இப்படி இருக்க தெய்வத்தால் நடைபெற வேண்டியது என்ன?

மேலும் நாம் பிரபஞ்சத்தில் அடைவதெல்லாம் இங்கே சொல்லப்படும் ஒரு மார்க்கத்தை தழுவியே அடையப்பட வேண்டும்.
1. சாஸ்திரங்களை அறிந்து ஆராய்ச்சி செய்து சித்தி அடைவது. அல்லது
2. குரு மூலமாக உபதேசம் அடைந்து  தெரிய வேண்டியவைகளை தெரிந்து கொண்டு சித்தி அடைவது. இதுவும் இல்லாவிட்டால்
,3. தன் சொந்த ஞானத்தாலோ, பிரயத்தனத்தாலோ சித்தி அடைவது. இந்த மூன்று மார்க்கங்களில் எதை அனுசரித்தாலும் நம் முயற்சி தான் தேவையாக இருக்கிறதே தவிர, தெய்வத்தால் கொடுக்கப்பட்டு நாம் அடைவது ஒன்றும் இல்லை.

அத்தியாயம் 21. மனித பிரயத்தனம்.
மனித பிரயத்தனம் இல்லாமல் எப்போது அவர்களின் காரியங்கள் யாதும் முடிவதில்லையோ, அப்போது தெய்வாதீனம் என்னும் கொள்கையால் என்ன பயன்? உதாரணமாக ஒரு பிராணியை உடல் வேறு கழுத்து வேறாக கொன்ற பிறகு அதற்கு உயிர் கொடுப்பதாக இருந்தால் கடவுள் செயல் என்று நம்பலாம். இப்படி பிரபஞ்சத்தில் நடப்பதாக நாம் அறிந்ததில்லை.

தெய்வம் எந்த ரூபமாக இருக்க முடியும்? பதார்த்த ரூபமாகவாவது, பத்தியால்  ஸ்மரிக்கபடும் படியாவது இருக்க வேண்டும். இவ்விரண்டில் எந்தவிதமாகவும் இருப்பதாக சித்தாந்தம் செய்ய முடிவதில்லை. அல்லது ஒரு சமயம் தெய்வமென்பது மூன்று உலகங்களுக்கும்அதிபதியாக இருந்து சகலத்தையும் ஆண்டு வருவதாக இருந்தால், நாம் ஒரு  செயலிலும் ஈடுபடாமலும், எல்லாம் தெய்வம் செய்துவிடுமென்றும் சும்மா இருந்து விடலாம்; நமது முயற்சிக்கு தேவையே இல்லை.

முடிவுரை:
எனவே ஒவ்வொருவரின் புத்தியின் அசைவே பலன்கள், புத்தி அசைவது பிராணங்களால், பிராணங்கள் அசைவது நாபிக் கமலத்தில் அசையாமல் வீற்றிருக்கும் பிரம்ம சக்தியால். அந்த அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அவனே தெய்வம், அவனே குரு, அவனே ஆன்மா, அவனே அருட்பெருஞ்ஜோதி.

எங்கெங்கு இருந்துஉயிர் ஏதெது வேண்டினும்
அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி”(அகவல் :168)
“ஏங்காது உயிர்த்திரள் எங்கெங்கு இருந்தன
ஆங்காங்கு அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி”(அகவல்: 772)
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment