அப்பர் தேவாரம் :1072

“ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்
நான் நிலாவி இருப்பன், என் நாதனை;
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.”
என்பது அப்பர் பெருமானின் தேவாரப் பாடல் எண் :1072

விளக்கம்:
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதுஎலாம்:
ஊன் எனும் உடலும், கண்களும் தானாகவே உணர்வதோ பார்ப்பதோ இல்லை; இவ் உடலுக்குள் இருக்கும் ஆவி எனும் உயிர் சக்தியாலேயே  அவைகளால் அவ்வாறு இயங்க முடிகிறது. அதேபோல் இவ் ஊனுக்குள் உள்ள வாய், காதுகள், மூக்கு, மனம், புத்தி, சுவாசம் மற்றும் இன்பம் ஆகியவைகள் தாமாக பேசுவதோ, கேட்பதோ, முகர்வதோ, சிந்திப்பதோ, அறிவதோ, சுவாசிப்பதோ, இன்ப உணர்வை அனுபவிப்பதோ இல்லை; ஒவ்வொரு ஊனுக்குள் ஆவியாக இருக்கும் அந்த உயிர் சக்தியாலேயே அவைகளால் அவ்வாறு இயங்க முடிகிறது.   ஒருவர் தம் ஊனில் உள்ள ஆவியானது, உயிர்க்கும்- இவ்வாறாக வெளிப்படும் பொழுதுஎலாம்;

நான் நிலாவி இருப்பன், என் நாதனை;
அந்த உயிர் சக்தியை  தன் நாதனாகவே, சிவமாகவே இடைவிடாது எண்ணி தியானித்துக் கொண்டே இருந்தால்…

தேன் நிலாவிய சிற்றம்பலவனார்:
அத்தகையவரின் சிற்றம்பலத்தில் குடி கொண்டிருக்கும்  நாதன், எவ்வாறு சிவனுக்கு தேன் அபிஷேகம் செய்யும்போது அது சிவனின் மேனி முழுவதும் பரவுகின்றதோ, அவ்வாறே சிற்றம்பலத்தில் ஊரும் தேனானது அத்தகையவரின்  ஊன் முழுவதும் பரவி நிலைக்க…

வான் நிலாவி இருக்கவும் வைப்பரே:
அத்தகையவரின் பிறவிப் பிணியை நீக்கி,  “வானாகி நின்றாயை யென்சொல்லி வாழ்த்துவனே” என்று மாணிக்கவாசகர் தம் திருவாசகத்தில் உரைத்தபடி, வானாகி நிற்கும் அவன் தம்முடன் இரண்டற கலக்க செய்து நிலை நிறுத்தி வைப்பான்.
திருச்சிற்றம்பலம்,🙏

பாருங்கள்! வானொலி பாடுகிறது,  உரையாற்றுகிறது. அது கலைஞர்களின் பெயர்களைக் கூட அறிவிக்கிறது. ஆனால் வானொலிக்குள் யாரும் இல்லை. நம்முடைய இருப்பும் அப்படித்தான்.உடல் நடப்பது, பேசுவது மற்றும் பல செயல்களைச் செய்வது போல் தோன்றலாம், ஆனால் உண்மையில் உடலுக்குள் எந்த ஒரு தனி நபரும் இல்லை. எல்லாம் சிவமே. அது ஒன்றே இருக்கிறது சப்த பிரம்மமாக!
~ பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி.

Leave a comment