
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
எழுத்தறிநாதர் எனும் அக்ஷரபுரீஸ்வரர் திருக்கோவில் திருஇன்னம்பர் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. இங்குதான் சிவபெருமான் அகஸ்திய மகரிஷிக்கு உயிரெழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, என்னும் இலக்கணத்தை கற்பித்ததாக சொல்லப்படுகிறது.
தைத்திரீயோபநிஷத்: சீக்ஷாவல்லீ: 3.3 ல், “வித்தையை பற்றிக் (கூறுமிடத்து) ஆசாரியன் முதல் (எழுத்து) வடிவம்; சிஷ்யன் பின் (எழுத்து) வடிவம், வித்தை சந்திக்குமிடம்; உபதேசம் சந்தியைச் செய்விப்பது” என்பதாக சொல்லப்பட்டுள்ளது.
இங்கு ஆசாரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது ஆத்ம சொரூபமாக விளங்கும் சிவத்தையே. இதுவே ஒவ்வொரு மானுட தேகத்திலும் உயிர் வித்தாகவும், முதல் உயிர் (எழுத்து) வடிவமாகவும் இருந்து கொண்டிருக்கிறது.
சிஷ்யன் என்பதும் அவ் உயிர் எழுத்தால் உருவம் பெற்ற, பின் (எழுத்து) வடிவாக விளங்கும் ஒவ்வொரு மானுட வடிவமும் ஆகும். அதாவது மெய் (உடம்பு) என்னும் இதுவும் எழுத்து வடிவமாகவே அமைந்திருக்கிறது.
அரிதிலும் அரிதான இம்-மானுடப் பிறப்பு கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவரும் தம்மை வெறும் உடம்பாக மட்டுமே உணராமல், இந்த உயிர், மெய் (எழுத்து) வடிவங்களின் மூலம் ஆன்மாவும் உடலும் சந்திக்கும் இடமான வித்தையாக தம்மை அறிந்து கொண்டால், (வித்தை என்பதற்கு ஆன்மாவிற்கு பேரறிவை கொடுக்கும் தத்துவம் என்று பொருள்).
சந்தி: என்பதற்கு எழுத்துச் சொற்களின் புணர்ச்சி என்று பொருள் உள்ளது. அதாவது முதல் (உயிர் எழுத்து) வடிவமான சிவம் என்னும் ஆசாரியன், மற்றும் பின் (மெய் எழுத்து) வடிவமான சிஷ்யன் என்னும் மானுட உடம்பு, இவைகளின் புணர்ச்சியால் (கூட்டுறவால்),
ரூபா ரூபம்-ப்ரதிரூபோ-பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!
அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! என்று பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19ல் கொல்லப்பட்டுள்ள படி,
எழுத்தறிவித்த இறைவன் ஆன எழுத்தறிநாதனாக விளங்கும் அப் பரம்பொருளுடன், தாமும் உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் இரண்டறக் கலந்த, உயிர்மெய் எழுத்தாகி ஒன்றாகலாம்.
திருச்சிற்றம்பலம் 🙏

