திருமூலர் திருமந்திரம் உரை எண் 2806 ன் விளக்கம்:

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

“அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள்  ஒளித்தது
கொண்ட குறியைக்  குலைத்தது  தானே.”

பூமி’ என்பது நிலம், நீர், காற்று நெருப்பு என்னும் நான்கு பூதங்களின் கலவையால் உருவாகி, ஆகாசத்தால் தாங்கப்பட்டு கொண்டும், தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் இருக்கிறது. அவ்யக்த மூர்த்தியாகிய ஆகாசமானது தன்னுடைய அளப்பரிய சக்தியால், மற்ற நான்கு பூதங்களின் கலவையைக் கொண்டு மானுட தேகம் உட்பட எண்ணற்ற வடிவங்களை, அதனுள் உயிர் வித்தாகவும் இருந்து கொண்டு, இப் பூமியில் உருவாக்கியும், அழித்தும், மீண்டும் உருவாக்கியும் கொண்டிருக்கிறது.

அவ்வகையில் அண்ட ஒளி என்பது நெருப்பையும், அகண்ட ஒளி என்பது எங்கும் பரந்து விரிந்த காற்றையும், பிண்ட ஒளி  என்பது எழுபது சதவிகிதம் நீராலும், மீதம் உள்ளவை நிலத்தின்  அம்சத்தாலும் உருவான ஒவ்வொரு மானுட உடம்பையும் குறிக்கும்.

எது உண்ணப்படுகிறது அது அன்னம் எது உண்கின்றதோ அது அன்னாதம், பிராணனும் சரீரமும் அன்னமும் அன்னதாமும் ஆகின்றன,  நீரும் நெருப்பும் அன்னமும் அன்னதாமும் ஆகின்றன, அவ்வாறே பூமியும் ஆகாசமும் அன்னமும் அன்னதாமும் ஆகின்றன, என்பது தைத்திரியோ உபநிஷத் வாக்கு.

அவ்வகையில்  அகண்ட ஒளியான காற்றான பிராணன், பிண்ட ஒளியான உடம்பிற்கு உணவாகின்றது, அதுபோன்று பிண்ட ஒளியாக உள்ள நீர் அண்ட ஒளியான நெருப்பினால் உண்ணப்படுகின்றது.  இவ்வாறு நான்கு பூதங்களும் ஒன்று மற்றொன்றுக்கு உணவாக, ஒன்றினால் ஒன்று உண்ணப்பட்டு, பிண்ட ஒளியில் ஒடுங்கி என் பெயர், என் உடம்பு  என்று உணர்வின்றி பேசும் பெருமையையே…

பூமியும் ஆகாசமும் அன்னமும் அன்னதாமும் ஆகின்றன என்ற மேற்கண்ட உபநிஷத் வாக்கின்படி,  இவ்வாறு உணர்வின்றி பெருமை பேசும் பிண்ட ஒளியான பூமியையே, அதாவது இவ்வுடம்பையே, உணவாக உண்ட வெளி என்னும் ஆகாச ஒளிக்குள்…

அதாவது, சுட்டிக் காட்டும் தன்மை கொண்ட நிலம் நீர் காற்று நெருப்பு என்னும் நான்கு பூதங்களில் ஒடுங்கப்பெற்ற தேகமானது, ஆகாச ஒளியால் உண்ண பட்ட பின்னர், தன் தன்மை முழுவதையும் குலைத்து அதாவது அழித்துக் கொண்டு, ஆகாச ஒளிக்குள் ஒளியாக, சுத்த சிவ ஜோதிக்குள் ஜோதியாக ஒடுங்கிவிடும்.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment