
‘மனிஷா பஞ்சகம்’ என்பது ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட ஒரு ஸ்தோத்திரமாகும் . இந்த ஐந்து சுலோகங்களில் சங்கரர் அத்வைத வேதாந்தத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அதில் வரும் ஓர் ஸ்லோக வரி, अहं दृष्टवस्तु नास्मि: அஹம் த்ருச்ய வஸ்து ந ச: ‘நான்’ என்பது காணப்படும் பொருள் அல்ல: இதை பற்றிய ஓர் ஆய்வு.
“உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்பது வள்ளுவரின் திருக்குறள்.
ஆழ்ந்த உறக்கத்தில் ஒருவரின் ‘நான்’ என்பது காணப்படும் வஸ்துவாக இல்லை, அதுபோன்றே அந்த நான் என்பதால் காணப்படுபவைகளும் ஏதும் இல்லை, இதுவே ஒவ்வொருவரின் இறப்பிற்கு ஒப்பான ஆழ்ந்த உறக்க நிலையாகும். எவ்வாறெனில் ஒருவர் இறந்த பின்பு அதுவரை சொல்லிக் கொண்டிருந்த நான் என்பது காணப்படாமலும், அதுபோன்றே இறந்த அவ்வுடல் முன்பு நிற்கும் எதுவும், அவ் உடலால் காணப்படாமலும், அறியப்படாமலும் இருப்பதால்…
சித்தர்கள் கை கொண்ட ‘சும்மா இரு’ என்னும் நிலை இதுவே எனக் கொள்ளலாம். ஏனெனில் இது உடல், மனம், புத்தி, பிராணன், மற்றும் ஆனந்தம் என்னும் ஐந்து கோஷங்களை பற்றிய உணர்வு இல்லாத, ‘சும்மா இருத்தல்’ என்னும் விழிப்புணர்வு நிலையின் அமைதி நிறைந்த அனுபவம் ஆகும்.
உறக்கத்திலிருந்து விழித்தவுடன், விழிப்புணர்வு நிலையின் இந்த அனுபவமே ஐந்து கோஷங்களின் வழியாக உணரப்பட்டு அறியப்படுகிறது.
இது தொடர, விழிப்பு நிலையில் ஒருவர் ‘நான்’ என்பதற்கு காரணமான தம் உருவத்தையும், பிராணங்களையும் ஸ்ரீ ஆதிசங்கரர் போதித்தபடி, காணப்படாத அக்ஷரத்தின் அம்சமாகவே குருவின் அருளால் உணரப்படும் போது,…
‘மனம், புத்தி, பரவச நிலை என்னும் ஆனந்தம் ஆகியவைகளும் காணப்படாமல் போக, ‘சும்மா இருத்தல்” என்னும் விழிப்புணர்வு நிலையின் அனுபவம் உறக்கத்திலும் விழிப்பிலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுவே மீண்டும் பிறத்தல் என்பது இல்லாத முக்தி நிலை எனலாம்!
“உறக்கத்திலும்,விழிப்பிலும் முறைமை வகிப்பவனுடைய யோகம் துன்பத்தை (வினையை திருவினையாக்கி) துடைப்பதாகிறது “ என்று கீதை இம்முயற்சியை யோகம் என்றே குறிபிடுகிறது.
ஓம் பஞ்சகோஶாந்தரஸ்தி²தாயை நம꞉ என்பது அம்பிகையின் ஓர் நாமம். இதை பஞ்சகோஶ அந்தர ஸ்தி²தாயை நம꞉ என்று பதம் பிரித்தால்,
பஞ்சகோஶ – அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமயம் ஆகிய பஞ்ச கோசங்கள்,
அந்தர – அழிவற்ற ஆத்மாவாக தூய விழிப்புணர்வாக நடுவில்,
ஸ்தி²தாயை – இருப்பவளுக்கு
நம꞉ – நமஸ்காரம் என்று இதன் பொருள்.
அதாவது ‘சும்மா இருத்தல்’ என்பது முயன்று அடையப் பெறும் தகுதி அன்று, மாறாக ஒருவர் தம் குரு அருளால் கிடைக்கப்பெற்ற அக்ஷரத்தை, ‘சொல் அற’ அறத்தின் அடிப்படையில், முறையாக தம் உருவாகவே உணர்ந்து கொண்டும், தம் பிராணனில் இடைவிடாது சொல்லி அழைத்துக் கொண்டும் இருந்தால்.. ‘சும்மா இருத்தல்’ என்னும் விழிப்புணர்வாகிய பராசக்தி, தன்னைத் தானே வெளிப்படுத்திக் காட்டிக் கொள்வாள்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

