
உங்கள் உணர்வில் நடக்கும் அனைத்தும் உங்கள் குருவே. மேலும் உணர்வைத் தாண்டிய தூய விழிப்புணர்வுதான் இறுதி குரு. நிசர்கதத்தா மஹராஜ் கூறியது.
இங்கு, நிசர்கதத்தா மஹராஜ் சுட்டிக்காட்டும் உணர்வு என்பது விழித்திருக்கும் போது வெளிப்படும் உடல் உணர்வையும், கனவு காணும் போது வெளிப்படும் மன உணர்வையும், உடல் மற்றும் மனம் இல்லாத நிலையில் ஆழ்ந்த தூக்கத்தின் போது வெளிப்படும் உணர்வையும், இந்த உணர்வுகளின் வெளிப்பாடு மூலம் நிகழும் செயல்களையும் குறிக்கின்றது.
இம்மூன்று நிலைகளிலும் செயல்,, வடிவம் கொண்டதாக ஆகிவிடுவதால், செயப்படு பொருளாக குரு உருவும், செய்பவனாக சீடனும் ஆகிவிடுகிறார்கள்.
அவ்வாறு செயப்படு பொருளாக புறத்தில் விளங்கிய குருஉருவே.
“செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே உய்பவை அளித்தெனுள் ஓங்குசற் குருவே” என்று அருட்பெருஞ்ஜோதி அகவல்:1061 ல் வள்ளல் பெருமான் அருளியபடி,
செய்பவனின் அகத்தில் உருவமற்ற பரம்பொருளாக விளங்கி, செய்பவனை செய்விக்கும் போது, அதே குரு உணர்வைத் தாண்டிய உருவமற்ற தூய விழிப்புணர்வாக, இறுதி குருவாகவும் ஆகிவிடுகிறார்.
அதாவது குரு உணர்வாக, செய்படுப் பொருளாக அறியப்படும் போது உருவமுடையவராகவும் அதே குரு தூய விழிப்புணர்வாக, செய்பவகளை செய்விப்பானாக வெளிப்படும் போது உருவமற்றவராகவும், அதாவது அகமும் புறமும் ஆக, குருவாகவும், குருவின் குருவாகவும் இருப்பதை, அறிந்தவன் எவனோ அவனே உண்மையில் தம் குருவை முழுமையாக உணர்ந்தவன் ஆகிறான்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

