திருமூலர் திருமந்திரம் உரை எண் 993 ன் விளக்கம்:

இன்று திருமூல நாயனார் குருபூஜை. அவர் அருளிய திருமந்திர உரையின் ஒரு பாடலை அவருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
“புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.”

எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்:
இணையடி: என்பதற்கு முட்டுக்கால் அதாவது தாங்கும் கால் என்று ஒரு பொருள் உள்ளது. முடியை அயனால் காண இயலாத அளவுக்கு ஓங்கி நிற்கும் அண்ணலை தாங்கி நிற்கும் இணையடி என்னும் திருவடிகளுக்கு ஒப்பான ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து  மந்திரமானது…

நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தை:
நண்ணுதல் என்பதற்கு கிட்டுதல்; பொருந்துதல்; செய்தல்; இருத்தல் என்று பல பொருள்கள் உள்ளன.  ஒருவருக்கு குரு அருளால் கிட்டி, அதை இணையடிக்கு ஒப்பான, தம் முழு தேகத்தையே தாங்கி நிற்கும் தம் திருவாசிகளில் (மூச்சுக்களில்) முறையாக  பொருந்தும் படி செய்து…

கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே:  சிவாய நம என்னும் இவ்வைந்து எழுத்து மந்திரத்தையும்,  வாசியையும் தம் இரு கண்களாக எண்ணி, வணங்கி இடைவிடாது தியானித்தால்… எவ்வாறு கண்கள் இரண்டாக இருந்தாலும் பார்வை மட்டும் ஒன்றாகவே இருக்கின்றதோ, அவ்வாறே அடியையும் முடியையும் காண இயலாது நிற்கின்ற அண்ணல், அத்தகையவரின் தியானத்தில் ஒன்றன கலந்து நிற்பார்…

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று: அவ்வாறு தியானத்தில் ஒன்றன கலந்து நிற்கும் அவ்-அண்ணலை, புண்ணியம் செய்து வானுலக எய்திய வானவர்கள் பூமழை தூவிநின்று வாழ்த்துவார்கள்.
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment