
“எல்லா உண்மையும் மூன்று நிலைகளைக் கடந்து செல்கிறது: முதலாவதாக, அது கேலி செய்யப்படுகிறது; இரண்டாவதாக, அது வன்முறையில் எதிர்க்கப்படுகிறது; மூன்றாவதாக, அது சுயமாகத் தெரிந்ததாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.”
— ஆர்த்தர் ஷாபன்ஹவுர் இவர் ஒரு ஜெர்மானிய மெய்யியலாளர் ஆவார்
எக்காலத்தும் அழியாதது எதுவோ அதுவே உண்மை என்பதாகிறது. அவ்வாறாயின் அவ் உண்மையை வெளிப்படுத்துபவரும் அழியாப் பெருநிலையை அடையும் பேற்றை பெறுபவராகத் தான் இருக்க வேண்டும். அது மரணம் இல்லா பெருவாழ்வு என்னும் பெரும்பேற்றே, அதுவே ஒரே உண்மையாகவும் ஆகும். மேலும் உண்மைக்கு உருவம் ஏதும் இல்லை என்பதே உண்மையின் உண்மையான பண்பு எனலாம்!

அவ்வகையில் Resurrection/ உயிர்த்தெழுதல் என்னும் உருவமற்ற உண்மையை இயேசு கிறிஸ்து எடுத்து உரைக்கும் போது, கேலி செய்யப்பட்டார், பின்பு அப் பகுதியை ஆண்ட அரசனால் அவரே வன்முறைக்கும் உள்ளாகி, சிலுவையிலும் அறையப்பட்டார், எனினும் மூன்றாம் நாள் இயேசுவே உயிர்த்தெழுந்த வந்தபோது அது உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதை தம் அனுபவமாக ஆக்கிக் கொண்ட வெகு வெகு சிலரை தவிர, உண்மையானது, சுயமாக அவர் தெரிவித்த உயிர்த்தெழுதல் என்ற உண்மையாக உணரப்படாமல், அவரது உருவமாக வெறும் வழிபாட்டுக்குரியதாக மட்டுமே இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் இயேசுவுக்குப் பின் வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ் உண்மையை கையாண்ட விதம் வேறு விதமாக இருந்தது. அதாவது இவ் உண்மையை கேலி செய்தவர்களை தண்டித்து, உருவமற்ற உண்மையை தன் சுய அனுபவமாக்கி தெரியப்படுத்தியதால், உண்மையானது இன்றளவும் வெறும் உருவ வழிபாடாக மாறிப் போய் விடாமல், இவ் உண்மையை முறையாக அறிந்து கொண்டவர்களுக்கு அவரவர்களின் சுய அனுபவமாகவே இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இவர்களுக்குப் பின் வந்த ஸ்ரீ ஆதிசங்கரர் உருவமற்ற உண்மை பொருளை நிர்குண பிரம்மம் என்ற தத்துவமாக வெளிப்படுத்தும்போது அவரும் கேலிக்கும், வன்முறைக்கும் உள்ளானார். எனினும் ஸ்ரீ ஆதிசங்கரர் உருவமற்ற உண்மை பொருளை தம் சுய உணர்வாக வெளிப்படுத்தினாலும், அதோடு கூட அவ் உண்மையை எல்லோரும் எளிதில் புரிந்து கொள்வதற்காக சகுன பிரம்ம தத்துவமாகவும் சேர்த்து வெளிப்படுத்திய காரணத்தால், உண்மையானது இன்றளவும் அதே இந்து மதத்தில் உள்ளவர்களாலேயும், வெளிப்புறத்தில் உள்ளவர்களாலேயும் கேலிக்கும், வன்முறைக்கும், உட்படுத்தப்பட்டு, உண்மை உணரப்படாமலேயே இருந்து கொண்டிருக்கிறது.

எனினும் உண்மைக்கு ஒருபோதும் அழிவில்லை, அது உலக மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் காலம் வரும் என்ற கருத்தில் வள்ளல் பெருமான்
“உலகுயிர்த் திரளெலாம் ஒளிநெறி பெற்றிட
இலகும்ஐந் தொழிலையும் யான்செயத் தந்தனை” என்று தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில், குறிப்பிட்டு பாடியுள்ளார்.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை, 🙏

