
சிவவாக்கியர் பாடல் 1 ன் பொருள்:
” ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே”
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை:
இப் பிரபஞ்சம் முழுவதும் அருட்பெருஞ்ஜோதியின் பிரகாச சக்தியால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஜோதியின் சக்தியே சூரிய வெப்பமாகி, கடலில் நீராவியாகி, குளிர்ந்த மேகமாகி, மழையாகி, பயிர்களாகி, உயிர்களுக்கு உணவாகி, அது ரத்தமாகி, விந்தணுக்களாகி, ஆணின் உடம்பிலிருந்து பெண்ணின் உடம்பிற்கு ஓர் விந்தணு சக்தியாக பயணித்து, பெண்ணின் கர்ப்பப்பையில் ஒரு மனித உருவை உருவாக்கி, இவ்வாறாக ஓடி ஓடி ஒவ்வொரு மனித உருவிலும், உருவினில் உருவாக உட்கலந்த ஜோதியை…
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்:
ஆரூரர் இங்கிருக்க அவ்வூர்த் திருநா ளென்(று) என்று பட்டினத்தார் பாடியபடி ஒவ்வொரு மனித உருவினில் ஓடி ஓடி உட்கலந்து ஜோதியாய் ஒளிர்ந்து கொண்டு (திரு) ஆரூரான் இங்கிருக்க. அவனை மற்ற இடத்தில் நாடி நாடி நாட்களும் கழிந்து போக…
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்:
எனினும் அவனின் உண்மையான இருப்பை அறிந்து உணர இயலாமல் வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்…
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே:
அவ்வாறு ஒவ்வொரு மானுட உடம்பினுள்ளும் உட்கலந்த ஜோதியை, அவ் உடம்பிற்கு வெளியே நாடி தேடி அறியஇயலாமல் வாடிப்போய் மாந்தர்கள் மாண்டு கொண்டே இருப்பதால் அது எண்ணிக்கையில் அடங்காததாகவே இருந்து கொண்டிருக்கிறது.
திருச்சிற்றம்பலம்,🙏

