
“விதி- உங்களை இணைக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். விதி- உங்களை ஒன்றிணைக்கும் மக்களை நேசிக்கவும், ஆனால் உங்கள் முழு மனதுடன் அவ்வாறு செய்யுங்கள்.- மார்கஸ் ஆரேலியஸ்
இவர் ஒரு ரோமானியப் பேரரசரும், தத்துவஞானியும் ஆவார்.
விதி என்பது ஒரு முடிவில்லாத சங்கிலி போன்றது. இதில் இணைக்கப்படும் விஷயங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருந்தாலும் இணைப்பு விட்டு போகாது. அதுபோன்றே ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஒவ்வொரு விதமான மக்கள், அவ்- விஷயங்களோடு இணைந்தே வருவார்கள். ஆனால் எதுவும் நிரந்தரம் இல்லாமல், முடிவில்லாமல் மாறிக்கொண்டே தான் இருக்கும். இவைகளை முழுமனதோடு ஒருவர் ஏற்றுக்கொண்டு, நேசிக்கவும் செய்ய வேண்டுமெனில், எது நிரந்தரம் என்பதை அறிந்த ஒருவருக்கே இது சாத்தியமாகும்..
எது நிரந்தரம்? ஒவ்வொருவர் உடம்பினில் வசிக்கும் உயிர் நிரந்தரம், உடம்பு மாறுபாடு உடையது, நிரந்தரமற்றது என்பதை அறிந்து, அவ் உயிரினில் நிலைபெற்று இருக்க அறிந்து கொண்டவர்களுக்கே, நிரந்தரமற்ற தம் உடம்பை ஏற்றுக்கொண்டு நேசிப்பது போல், உடம்போடு ஒட்டிப் பிறந்த விதியையும் ஏற்றுக்கொண்டு நேசிக்கவும், மேலும் அந்த விதியை “சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்(கு)
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும்” என்று அவ்வை பிராட்டி தம் நல்வழியில் கூறியபடி, பிறவியை முடிவுக்கு கொண்டு வரவும் இயலும்.
அவ்வாறு எது நிரந்தரம் என்பதை அறிந்து கொண்டு, அதில் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள இயலாதவர்கள், “அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்.” என்று அவ்வை பிராட்டி கூறியுள்ளபடி, தம் விதியை நொந்து கொண்டே அதை முடிவுக்கு கொண்டுவரும் வகை தெரியாமல் காலத்தை கடத்திக் கொண்டிருப்பார்கள்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

