
When the soul begins to remember where it truly belongs, the noise of the world slowly fades. – Rumi
ஆன்மா உண்மையில் எங்கு சேர்ந்தது என்பதை நினைவில் கொள்ளத் தொடங்கும் போது, உலகின் இரைச்சல் மெதுவாக மறைந்துவிடும். – ரூமி
Interpretation:
இறந்த பின்பு ஒருவரது ஆன்மா கரை சேர்ந்ததாக, அல்லது இங்கு செய்யும் சடங்குகள் மூலம் கரை சேர்த்ததாக எண்ணிக் கொண்டிருப்பது இரைச்சல் நிறைந்த அனுமானங்களே அன்றி, உண்மையில் அதற்கு பிரமாணங்கள் என்று எதுவும் இல்லை.
மாணிக்கவாசகப் பெருமான் தனது ஆன்மா, மணிவாசகர் என்னும் பேர் கொண்ட இம்மானுட உருவோடு சேர்வதற்கு முன்பு, வேறு எந்தெந்த உருவங்களோடு சேர்ந்து சேர்ந்து பிரிந்தது என்பதை தம் சிவபுராணத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். அதாவது இதற்கு முன்பு புல்லாகியும், பூண்டாகியும், புழுவாகியும், மரமாகியும், பல மிருகங்களாகியும், பறவையாகியும், பாம்பாகியும், கல்லாகியும், பேயாகியும், பூத கணங்களாகியும், வலிய அசுரராகியும், தனது ஆன்மா மாறி மாறி இவைகளோடு சேர்ந்து பிரிந்ததை குறிப்பிட்டு, எல்லா உருவங்களோடும் சேர்ந்து, எல்லா பிறப்பும் பிறந்து இளைத்ததாகவும் கூறியுள்ளார்.
அவ்வாறு கடந்த காலங்களில் தனது ஆன்மா எங்கெங்கு எந்தெந்த உருவங்களோடு சேர்ந்திருந்தது என்பதை மாணிக்கவாசகப் பெருமான் போன்று அறிந்த ஒருவருக்கே, இறந்த பின்பு தனது ஆன்மா வேறு எங்கு எந்த உருவில் சேரும் என்பதையும் அறிவார்கள்.
இத்தகையோரே அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மானுட பிறவியைக் கொண்டு, “மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்” என்று மணிவாசகப் பெருமான் பாடியதைப் போன்று வீடு பேறு என்பதையே தன் ஆன்மாவுக்கு இறுதி பிரமாணமாக ஆக்கிக் கொள்ள முயல்வார்கள், அதன் காரணம் உலகின் இரைச்சல் மெதுவாக மறைந்துவிடும்.
மாறாக கடந்த கால பரிணாம உருவ மாற்றங்களை தம் நினைவில் கொள்ள இயலாத ஆன்மாக்களின் எதிர்காலமும், வெறும் அனுமானமாகத்தான் இருக்குமே அன்றி ஒருபோதும் பிரமாணமாக ஆகாது. உலகின் இரைச்சல் என்பதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏

