
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்,
பாதிநல் லாளும் பகவனும் ஆனது,
சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்,
வேதனை தீர்தரும் வௌளடை யாமே.
மாதுநல் லாளும் மணாளன் இருந்திட: திருமூலர் இங்கு குறிப்பிடும் ‘ மாது’ என்பது ஒவ்வொரு மனித உருவும் தோன்றக் காரணமாக இருக்கும் உயிர் வித்தாகிய, ‘ பராசக்தியே’ ஆகும். அவ்வாறு மாதுநல் லாளும் (உயிரும்) அவளின் மணாளனாகிய சிவமும் (உடம்பும்) இருந்திட…
பாதிநல் லாளும் பகவனும் ஆனது: பகவன் என்பதற்கு சிவன், திருமால், பிரம்மன், தேவர்கள், சூரியன், சந்திரன், மற்றும் இப் பிரபஞ்சத்தில் உருவமுடைய அனைத்தும் என்று பொருள்கள் உள்ளது.
தோற்றத்திற்கு அப்பால் உயிர் வித்தாக விளங்கும் பராசக்தி பாதிநல் லாளுமாய், தோன்றியுள்ள சிவாம்சம் பொருந்திய உருவங்கள் யாவும் பகவனுமாய், அதாவது பூரணத்திலிருந்து பூரணமாக, சிவ சக்தியாக ஆயிற்று.
சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்:
அரிதற்கு அரிதான மனிதப் பிறவியாய் பிறந்து, ஆணும் பெண்ணுமாய் விளங்கும் இம்மானுட வடிவைப் பெற்ற மணாளன்கள், தம் தேகத்துக்குள் உயிர் வித்தாக ஒளிரும் சோதிநல் லாளை முறையாக அறிந்து, உணர்ந்து தம் வாழ்நாள் துணையாக வார்த்து கொண்டால், அதாவது தம் உருவமும் உயிரும் சிவசக்தியின் அம்சமே என்பதை உணர்ந்து கொண்டால்..
வேதனை தீர்தரும் வௌளடை யாமே: அச்- சிவசக்தியே இப்பிரபஞ்சம் முழுவதும் உள்ள எவ்வுருவிலும் அவ்வுருவாகவே, அதாவது சிவசக்தியாகவே வியாபித்து விளங்கிக் கொண்டிருக்கும் உண்மை வெளிப்படும். அது நீங்காத வேதனை தரும் மாயப் பிறப்பிற்கு நிரந்தர தீர்வாக மாறும்.
திருச்சிற்றம்பலம், 🙏

