
மிகையும் துரத்த, வெம் பிணியும் துரத்த, வெகுளி ஆனதும் துரத்த, மிடியும் துரத்த, நரை திரையும் துரத்த, மிகு வேதனைகளும் துரத்தப், பகையும் துரத்த, வஞ்சனையும் துரத்தப், பசி என்பதும் துரத்தப், பாவம் துரத்தப், பதி மோகம் துரத்தப், பல காரியமும் துரத்த, நகையும் துரத்த, ஊழ் வினையும் துரத்த, என் நாளும் துரத்த, வெகுவாய் நா வறண்டு ஓடிக், கால் தளர்ந்திடும் என்னை நமனும் துரத்துவானோ? என்று அபிராமி பட்டர் தம்முடைய அபிராமியம்மை பதிகம்: 11ல் கேள்வியாக கேட்கிறார்.
மிகை: என்பதற்கு செருக்கு என்று பொருள் உள்ளது. ஒவ்வொரு மனிதனையும் துரத்தி தமக்கு அடிமை கொள்ளச் செய்வது என்பது செருக்கு என்னும் குணத்தின் பொதுவான இயல்பு.
இதுபோன்றே மனித வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் அபிராமி பட்டர் இப்பதிகத்தில் பட்டியலிட்டு, இவைகள் யாவும், ஒவ்வொருவரையும், அவர்களது இறுதி மூச்சு வரை துரத்திக் கொண்டேதான் இருக்கும் என்பதாக சுட்டிக் காண்பித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் வாரணாசி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, அனேக குரங்குகள் அவரைத் துரத்தத் தொடங்கின. முதலில், பயந்து ஓடினார். ஆனால், குரங்குகள் அவரை இன்னும் வேகமாகத் துரத்தின. அப்போது, அவர் ஒரு பெரியவரின் குரலைக் கேட்டார். அந்தப் பெரியவர், “ஓடாதே, தைரியமாக எதிர்கொள்” என்று கூறியது அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. அந்த அறிவுரைப்படி சுவாமி விவேகானந்தர் நின்று, குரங்குகளை நேரடியாக எதிர்கொண்டார். அப்படிச் செய்தபோது, குரங்குகள் பயந்து ஓடிவிட்டன.
அது போன்றே தான் அபிராமி பட்டர் கூறும் துரத்தக்கூடிய இவைகள் யாவும் குரங்குகளுக்கு ஒப்பானது தான். இவைகளை கண்டு பயந்து ஓடாமல், தெய்வ பலத்தை மட்டும் நம்பி எதிர்த்து நின்றால் இவைகள் யாவும் பணிந்து போய்விடும். அதாவது இவைகளால் உருவாகும் துன்பங்களினால் இத்தகையவர்களது மனோபலம் மட்டும் ஒரு சிறிதும் பாதிப்புக்கு உள்ளாகாது என்பதினால்…
நமனும் துரத்துவானோ?
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணியாக விளங்கும் அன்னை அபிராமியின் அருளால் கிட்டிய குன்றாத மனோ பலத்தால், இறுதி காலத்தில் நமனால் துரத்த முடியாது என்னும் பதிலோடு இப்பதிகத்தை முடித்துள்ளார்.
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

