“ஆசிரியர் தினம், செப்டம்பர் 5- 2025”

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
இன்று ஆசிரியர் தினம், நம் வள்ளுவர் பெருமான் எவ்வாறு  ஆசிரியரை, அதாவது மெய்ஞான கல்வியை போதிக்கும் ஆசிரியரை, சிறப்பித்து சொல்லியுள்ளார் என்பதை பற்றி இங்கு காணலாம்.

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.” குறள்:2

கற்றதனால்’ என்று வரும்போது, அது கல்வி கற்ற மாணவனையே குறிக்கிறது,

வாலறிவன்: ‘வால்’ என்பது சில வகை விலங்குகளுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் ஒரு பகுதி உடலின் உட்புறத்திலும், மற்றொரு பகுதி உடலின் வெளிப்புறத்திலும் இருக்கும். உட்புறத்தில் உள்ளது கண்களுக்கு புலப்படாது, வெளிப்புறத்தில் உள்ள ‘வால்’ கண்களுக்கு புலப்படும்.

அதுபோன்று ‘வ்யக்தம்’ என்பது ஒரு சமஸ்கிருத சொல், அதற்கு வெளிப்படுத்தப்பட்டது என்று பொருள். அதுபோன்று ‘அவ்யக்தம்’ என்பதும் ஒரு சமஸ்கிருத சொல். அதற்கு வெளிப்படுத்தப்படாதது என்றும் பொருள் உள்ளது.

அதாவது  ‘வ்யக்தம்’ என்னும் வெளிப்படுத்தப்பட்டதை பற்றிய கல்வி (manifested education), ‘அவ்யக்தம்’ என்னும் வெளிப்படுத்தப்படாததை பற்றிய கல்வி (unmanifested education)  இவ்விரண்டையும் ஒன்றாக கூட்டி அறிந்து அதை தம் மாணாக்கனுக்கும் கற்பித்த ஆசிரியரையே ‘வாலறிவன்’ என்பதாக இங்கு வள்ளுவர் பெருமான் மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார்.

நற்றாள் தொழாஅர் எனின்’ என்பது இத்தகைய கல்வியை கற்பித்தவனின் திருவடிகளை தொழவில்லை என்றால், இங்கு திருவடிகள் என்பதற்கு மெய்ஞான கல்வியை கற்பித்தவரின்  பாதங்களை குறிப்பதாக பொருள் கொள்ளாமல், வாலறிவன் என்னும் சொல்லுக்கு ஏற்ப,

இத்தகைய கல்வியை கற்றவர் எவ்வாறு அவரின் மூச்சானது உள்ளும் புறமும் ஆக இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கிறதோ, அவ்வாறே தாம் கற்ற அக்கல்வியையும், அவர்தம் புறத்திலும் அகத்திலும், இயங்கிக் கொண்டிருக்கும் பிராணங்களின் வழியாக முறையாக பொருத்தி, திருவாசிகளாக்கி, அதையே நற்றாள் ஆக எண்ணி, இடைவிடாது தம்முள்ளேயே அதை தொழவில்லை என்றால், அதாவது  தாம் கற்ற அக்கல்வியை இடைவிடாது பயிற்சி செய்யாமல் போனால்…

அம்-மாணாக்கனுக்கு, வாலறிவன் என்னும் இவ் ஆசிரியர்  மூலம் கற்ற கல்வியினால் என்ன பயன்? என்று வள்ளுவர் பெருமான் இத்தகைய ஆசிரியர்களையும் அவர்தம் பணிகளையும் வெகுவாக சிறப்பித்து இக்குறளில் சொல்லியுள்ளார்.

ஆசிரியர் தினமான இன்று எமக்கு இத்தகைய கல்விதனை கற்பித்த வாளறிவனாகிய ஆசிரியனுக்கு மனமார்ந்த நன்றிகள் பல சொல்லி எம் ஆசிரியரை வணங்குகிறேன்🙏🏿

Leave a comment