திருமூலர் திருமந்திரம் உரை எண் 307 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

“உறுதுணை யாவது உயிரும் உடம்பும்
உறுதுணை யாவது உலகுறு கேள்வி
செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற பிறப்பில்லை தானே”.

உறுதுணை யாவது உயிரும் உடம்பும்:
உறு: என்பதற்கு போர் என்றும் ஒரு பொருள் உள்ளது. மெய் வாய் கண் செவி நாசி இன்னும் இவ்வைந்து புலன்களும் ஐம்பொறிகளில் சிக்கி சிறைபிடிக்கப்படாமல் இருக்க, ஐம்பொறிகளோடு இவ்வைந்து புலன்களைக் கொண்ட உடம்பானது போரிட்டு வெல்வதற்கு உற்ற ஒரே உறுதுணையாக இருக்கும் உயிரும்…

உறுதுணை யாவது உலகுறு கேள்வி:
அவ்வாறு உற்ற உறுதுணையாக இருக்கும் உயிருக்கும் ஏற்ற உறுதுணையாக இருக்கும் மெய்ஞ் ஞானத்தைப் பற்றிய கேள்வியும்…

செறிதுணை யாவது சிவனடிச் சிந்தை:
செறி: என்பதற்கு நெருக்கம் என்று பொருள். அவ்வாறு உயிர்குறு கேள்விகள் எழுவதற்கும், செறிதுணையாக, அதாவது நெருக்கமான இடைவிடாத துணையாக உயிருக்கு இருப்பது, அபாயம் ஒரு நாளும் இல்லாத “சிவாய நம” என்னும் இடைவிடாத சிந்தனையே…

பெறுதுணை கேட்கிற பிறப்பில்லை தானே:
பிறப்பில்லா பெருவாழ்வு வேண்டி விரும்பி கேட்கின்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும், பெறுதுணையாக யாவது இவைகளையாம். இத்துணைகள் இன்றி பிறவிப் பெருங்கடலை நீந்துதல் என்பது எவருக்கும் இயலாத ஒன்று.
திருச்சிற்றம்பலம் 🙏