விநாயகர் சதுர்த்தி

ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏
இன்று விநாயகர் சதுர்த்தி
விநாயகர் அகவலில் உள்ள
“சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி”
என்ற விநாயகர் அகவல் வரிகளின் மெய்ப்பொருளை பற்றி இங்கு ஆராயலாம்.

  “சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திர சத்தம் ஒவ்வொருவரின் நாவின் வழியே வெளிப்புறமாகவும் உருவாகும். அதுவே முறையான பிராணாயாமம் வழியாக ஒவ்வொருவரின் உட்புறத்தில் இருந்தும் வெளிப்படும். “சிவாய நம” என்னும் இந் பஞ்சாட்சர மந்திர சத்தம் பிராணங்களின் வழியாக ஒருவரின் உள்ளே வெளிப்படும் போது, அது அவர்களின் உள்ளேயே குடி கொண்டிருக்கும் சதாசிவத்தை வெளிக்காட்டி அருளும்.

அதாவது ஒவ்வொருவரின் உள்ளிருந்து “சிவாய நம” என்று வெளிப்படும் “சத்தத்தின் உள்ளே இருந்துதான் சதாசிவம் தோன்றும்”, மாறாக எவரும் .”சிவாய நம” என்னும் தம் சத்தத்தின் வெளிப்புறம் வழியாக சதாசிவத்தை காணுவது என்பது இயலாத ஒன்று என்பது இதன் உட்பொருள்

அவ்வாறு ஒருவரின் உள்ளே உருவாகும் “சிவாய நம” என்னும் சத்தம் வழியாக சதாசிவம் வெளிப்படும் போது, அத்தகையவரின் சித்தமும் எம் முயற்சியுமின்றி அச்- சத்தத்தை தொடர்ந்து உள்ளேயே அடங்க,

“சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை” என்று மாணிக்கவாசகர் தம் திருவம்பாவையில் பாடி உள்ளபடி, உள்ளடங்கிய சித்தம், சித்த சுத்தியடைந்து,  சித்தம் அழகியராய் ஆகி இடைவிடாது தொடர்ந்து உள்ளிருக்கும் சிவனைப் போற்றி பாடிக்கொண்டே இருக்கும்.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏