திருமூலர் திருமந்திரம் உரை எண் 1666 ன் விளக்கம்:

“கங்காளன் பூசும் கவத் திருநீற்றை,
மங்காமல் பூசி மகிழ்வரேயாம் ஆகில்,
தங்கா வினைகளும் சாரும் சிவகதி,
சிங்காரம் ஆன திருவடி சேர்வரே”

கங்காளன் பூசும் கவத் திருநீற்றை: பொதுவாக திருநீறு என்பது பசுவின் சாணம் போன்ற ‘புறபொருட்கள்’ கொண்டு உருவாக்கும் வெண்ணீறு, எனினும் அதை நெற்றியில் பூசிய ஒரு சில மணித்துளிக்குள் அதன் ஒளி குன்றி மங்கிவிடும்.

ஆனால் கங்காளன் பூசும் கவச திருநீறு என்பது புறப்பொருள்கள் ஏதுமின்றி ‘அகப் பொருளால்’ மட்டுமே உருவாகும், ‘ மாசில் வெண்பொடி’ என அப்பர் பெருமான் தம் தேவாரப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளபடி ‘ மாசில் என்னும் குற்றமற்ற  திருவெண்ணீறு ஆகும்’.

அதாவது மகாபாரதத்தில் எவ்வாறு கர்ணன் பிறக்கும் போதே உயிர் காக்கும் கவச குண்டலங்களோடு ஒட்டிப்  பிறந்தானோ, அவ்வாறே ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும், அவர்கள் பிறந்ததிலிருந்தே உயிர் காக்கும் கவசமாக, கங்காளன் எனும் சிவத்தின் சாம்பல், மாசில் வெண் பொடியாக, குற்றமற்ற திருநீறாக அவரவர்களின் உடம்புக்குள்ளேயே உறைந்தும், மறைந்தும் குடிகொண்டிருக்கும்

மங்காமல் பூசி மகிழ்வரே யாம் ஆகில்: ஒளி பொருந்திய அத்த திருநீற்றை சிவாயநம என்னும் பஞ்சாட்சர மந்திரத்தோடு கலந்து, உடல் முழுவதும் பூசிக்கொள்ளும் மெய்ஞானக் கல்வியானது குருஅருளால் ஒருவருக்கு கிட்டி, அது மங்காமல் இருக்க,  சிவாயநம என்னும் ஒளிபுரிந்திய பஞ்சாட்சர மந்திரமயமான இத் திருநீற்றை இடைவிடாது ஜெபித்துக் கொண்டே, அதாவது பூசிக் கொண்டே இருந்தால்…

யாம் என்னும் சொல் பன்மையைக் குறிக்கும் பதம். அதாவது இத் திருநீற்றை ஒருவர் மங்காமல் பூசிக் கொள்ளும் போது, ஜெபிப்பவர் மற்றும் ஜபத்திற்கு அதிபதியாய் விளங்கும் சிவம் இவ்விரண்டும் ஒன்றிணைந்து ‘ யாம்’ என்னும் பன்மையாகி மகிழும் போது…


தங்கா வினைகளும் சாரும் சிவகதி; அத்தகையவரின் மானுட யாக்கை வடிவம் சிவத்தையே சார்ந்து சிவமயமாய் ஆகிவிடும். அதன் காரணம் அதுவரை அவ் உடம்பையே தம் இருப்பிடமாக்கிக் கொண்டிருந்த பிறவிப் பிணிக்கு காரணமான வினைகள் யாவும், தங்கா: இனி அவ் உடம்பில் தங்காத நிலைக்கு தள்ளப்படும்.


சிங்காரம் ஆன திருவடி சேர்வரே: இனிப் பிறவா நிலை என்னும் பெரும்பேற்றை எய்தி, பேரின்பம் மிக்க சிவத்தின் திருவடி சேர்வார்கள்.
திருச்சிற்றம்பலம், 🙏

Leave a comment