யார் இந்த ‘ நான்’

பத்ரகிரியாரின் மெய்ஞான புலம்பல்:
“அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்? “

அறிவை அறிவால் அறிந்தே:
ஒருவன் நான் என்று வெளிப்படும் தூய அறிவை, அதாவது பிரம்மத்தை, தன் உருவால், மனதால், புத்தியால், பிராணங்களால், மற்றும் பரவச நிலை என்னும் ஆனந்தத்தால் அறிய முடியாது என்னும் அறிவை தம் அறிவால் அறிந்து…

அறிவும் அறிவுதனில்பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்?:
அவ்வாறு அறிந்து உணரும்போது, தன்னில் தானாகவே வெளிப்பட்டுப் பிரகாசிக்கும், நான் என்ற தூய அறிவுதனில்பிறிவுபட நில்லாமல் நானாகவே நிற்பது இனி எக்காலம்?

கேனஉபநிஷத் 2: 3 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. அதாவது நான் என்னும் பிரம்மம் உருவால், மனதால், புத்தியால், பிராணங்களால், மற்றும் பரவசநிலை என்னும் ஆனந்தத்தால் அறியப்படாதது என்பது எவன் மதமோ அவனால் நான் என்பது அறியப்பட்டதாம். மாறாக  நான் என்பது பஞ்ச கோசங்களால் அறியப்பட்டது என்பது எவன் மதமோ அவன் நான் என்பதை அறியவில்லை. அதாவது நான் என்பது அறிவாளிகளால் (தியானத்தால்) அறியப்படாதது, அறிவீனர்களால் (தியானம் செய்யாதவர்களால்) அறியப்பட்டதாய் கருதப்பட்டுக் கொண்டிருப்பது.

என்னை அறியேன் நான், என்னை அறிந்தேன் நான்
என்னல் நகைப்புக் கிடனாகும்- என்னை
தனை விடயமாக்க இரு தானுண்டோ வொன்றா
யனைவரனுபூதி யுண்மையால்.
(ரமண மகரிஷி)
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment