“தெய்வத்தின் குரல்! ”

“ சும்மா இரு; சொல்லற! ” – ஆறுமுகப்பெருமான் அருணகிரிநாதரைத் தடுத்து ஆட்கொண்ட பின், அருளிச்செய்த முதல் உபதேசம்! முதன்மையான உபதேசம்! இதைப் பற்றிய மெய்ப்பொருளை பற்றி சிந்தித்துப் பார்க்கலாம்.

“வார்த்தையை பயன்படுத்தாத குரல் ஒன்று உள்ளது, அதை கேளுங்கள்” என்பது சூபி ஞானி ஹஸ்ரத் ரூமியின் கூற்று.

“இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.” என்பது வள்ளுவர் பெருமானின் திருக்குறள் உபதேசம்.

“இருவேறு உலகத்து இயற்கை”
ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு விதமான குரல்கள் இயற்கையாகவே இறைவனால் அருளப்பட்டிருக்கிறது. ஒன்று வார்த்தையை பயன்படுத்தி தம் நாவின் வழியே அனைவரும் கேட்கும்படி வெளிப்படுத்தும் மனிதக் குரல், மற்றொன்று வார்த்தையை பயன்படுத்தாத, ஆனால் அவரவர் அகத்தின் உள்ளேயே, மற்றவர் எவருக்கும் கேட்காத, தன்னில் தானாகவே இருந்து ஒலித்துக் கொண்டிருக்கும் தெய்வத்தின் குரல்…

“திருவேறு”
ஆனால் இவ் – இயற்கையில், இறையருளை விரும்பி நாடாத பெரும்பாலான மக்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை, வார்த்தையை மட்டுமே பயன்படுத்தும் மனிதக் குரலை மட்டுமே கேட்டறிந்திருக்கிறார்கள். வார்த்தையை பயன்படுத்தாத ‘ திரு என்னும் தெய்வீக குரல்’ அவர்களால் அறியப்படாமலேயே அதாவது கேட்கப்படாமலேயே, “திருவேறு” என்று வள்ளுவர் பெருமான் குறிப்பிட்டுள்ளது போன்று ‘திரு- வேறாகி’ விட்டது…

“தெள்ளிய ராதலும் வேறு”
ஆனால் அதே இயற்கையில், “திருவேறு” என்பது குரு அருளால் திருவருளாக மாறி, அதன் மூலம் தெள்ளத் தெளிவும் அடைந்த வெகு வெகு சிலருக்கு மட்டுமே அகர்மத்தில் கர்மமாக, அதாவது ‘ சும்மா இரு என்ற செயலற்ற நிலையில் செயலாக’,
‘ சொல்லற என்ற வார்த்தையை பயன்படுத்தாத, அதாவது சொல்லாமல் சொல்லும் சிவாய நம’ என்னும் பஞ்சாட்சர மந்திரமாக,
தெளிவடைந்த அவர் அகத்தின் உள்ளேயே, தன்னில் தானாகவே விளங்கிக் கொண்டும், இடைவிடாமல் சதா ஒலித்துக் கொண்டிருக்கும் திருவேறாகிய, தெய்வத்தின் குரலைக் கேட்கும் அரிய வாய்ப்பு கிடைக்கும். அதன் மூலம் மனித குரல் நாளடைவில் மங்கிப் போய் தெய்வத்தின் குரல் மேலோங்கி நிற்க, இயற்கையை வென்று மரணம் இல்லா பெருவாழ்வை பெற்று சிவகதி சேர்வார்கள்.

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment