திருமூலர் திருமந்திரம் உரை எண் 1726 ன் விளக்கம்:

“மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே.”

ஆக்கை என்பதற்கு கட்டுகை என்று ஒரு பொருள் உள்ளது. ஒவ்வொரு மானுட வடிவமும் கோடிக்கணக்கான அணுக்களால் கட்டப்பட்ட வடிவமே ஆகும். அது போன்று  “அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுக வல்லார்கட்கு” என்னும் மற்றொரு திருமந்திர உரையின் படி, மானுட வடிவின் ஒவ்வொரு அணுவிலும் அணுவாக, சிவமே நிறைந்திருக்கிறது. அவனை அணுக…

அதாவது ஒருவர் தன்னுடைய வடிவத்தை மெய்,வாய், கண், செவி மற்றும் நாசி என்னும் ஐம்புலன்கள் கொண்ட ஒரு உடம்பாக பார்க்காமல்,

அணு வடிவாகவே தம்மை எண்ணி, அணுவின் வழியாக,

அதாவது தம் ஒவ்வொரு உள் மற்றும் வெளிப்புற சுவாசத்தின் வழியாக ‘சிவாய நம’ என்று சிந்தித்தபடியே அணுகி, அதன் வழியே தன்னை பார்த்தால்…

அணுவில் அணுவான ஆதிபிரான் சிவலிங்கம் வடிவாக,

சிதம்பரம் வடிவாக,

சதாசிவம் வடிவாகவே,  தம் வடிவில் விளங்கி ஒளிர்ந்து கொண்டிருப்பதை  உணரலாம்.

மேலும் அவ்வுணர்வொளியின் மூலம் கிட்டும் ஆனந்தம் காரணம், அம்மானுட  வடிவானது  இடைவிடாத திருக்கூத்தின் வடிவாகவே ஆகிவிடும்.

அவ்வையின் நல்வழி பாடல் 15 ம் இவ்வாறே கூறுகிறது:
“சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை – உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்.” என்று,

அதாவது “சிவாய நம” என தம் வடிவை உடம்பாக எண்ணி நாவினால் உச்சரிக்காமல், அணு வடிவாகவே எண்ணி, அணுவில் அணுவான ஆதிபராணை, அணு வழியாக, அதாவது தம் ஒவ்வொரு சுவாசத்தின் வழியாக “சிவாய நம” என சிந்தித்தபடியே தம் வடிவை பார்ப்பவருக்கு, மரண அபாயம் என்பது ஒரு நாளும் இல்லை. விதியை மதியால் வெல்லும் உபாயம் இதுவே, அதுவே மதியாகும். இது இல்லாத எல்லா அறிவுகளும் விதியின் படியே ஆகிவிடும்.
திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment