
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
“கல்லாத மூடரைக் காணவும் ஆகாது.
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே”.

கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்:
கல்லாத மூடர்க்கும், கல்லாதவருக்கும் உள்ள வேறுபாட்டை பைபிளின் கீழ் கண்ட வாசகம் விவரிக்கிறது.
” நீதியின் வழியை அறிந்தபின்பு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளையை விட்டு விலகுவதை விட, அதை அறியாமலிருந்திருந்தால் அவர்களுக்கு நலமாயிருக்கும் .” சத்தியத்தைப் புரிந்துகொண்டபின்பு அதை நிராகரிப்பது, அதை அறியாமலிருப்பதை விட மோசமானது என்று 2 பேதுரு 2:21 வசனம் அறிவுறுத்துகிறது.

அதாவது நீதியின் வழியை அறிந்த பின்பும் அதை விட்டு விலகுபவர்கள் கல்லாத மூடர்கள் என்றும், இத்தகையவர்களை விட நீதிக்கென்று ஒர் வழி உள்ளதை அறியாமலேயே இருப்பவர்கள் கல்லாதார் என்றும், இத்தகைய கல்லாதவர்கள், கல்லாத மூடர்களை காட்டிலும் நல்லவர்கள் என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் பாகுபடுத்துள்ளார்.
கல்லாத மூடர் கருத்தறி யாரே:
நீதியின் வழி அறிந்து அதில் நிற்பவர்கள், இத்தகைய கல்லாத மூடர்களுக்கு எத்துணை முறை கற்பித்தாலும் அவர்களால் அதன் உட்கருத்தை அறிய இயலவே இயலாது.
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது.
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று:
ஆகையால் இத்தகைய கல்லாத மூடர்களை, நீதியின் வழி நிற்பவர்கள் காணாமலே இருப்பதே நல்லது என்றும்,
கடன்: என்பதற்கு முறைமை என்று பொருள் உள்ளது, அதாவது இத்தகைய கல்லாத மூடர்களுடன் முறைமை என்னும் அடிப்படையில் உறவுகள் கொண்டு, அவர்கள் சொல் கேட்காமல் இருப்பதும், நல்லது என்றும் திருமூலர் நமக்கு அறிவுறுத்துகிறார். ஏனெனில்?

“நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாக பற்றியிழுக்கின்றன“ என்று பகவத்கீதை: ஸாங்கிய யோகம்: ஸ்லோகம்: 60 ல் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்துள்ள படி,
அதாவது கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் கொண்ட கல்லாத இம் மூடர்களின் செயல்பாடுகள் யாவும், பொதுவாக நீதிக்கு புறம்பான பக்கமே சார்ந்து இருக்கும் என்பதால், அவர்களைக் காணவும், கருத்தறியாத அவர்கள் சொல் கேட்கவும் செய்தால்…
இத்தகையோரின் மனங்களில் குடிகொண்டிருக்கும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள், அதனுடன் சேர்ந்த நீதிநெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் பலவந்தமாக பற்றி இழுத்து தீயநெறிகளில் தள்ளிவிடும் ஆற்றல் கொண்டது என்பதால்…
திருச்சிற்றம்பலம், 🙏

