திருமூலர் திருமந்திரம் உரை எண் 620 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
இறப்பதற்கு  முன் இறந்து பார் என்ற கருத்தின் அடிப்படையில்
திருமூலர் திருமந்திரம் உரை எண் 620  ன் விளக்கம்:


மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு  மன்மனத்து உள்ளே மனோலயம் ஆமே.

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு:
மன்: என்பதற்கு மந்திரம் என்று ஒரு பொருள் உள்ளது, மன்மனம்: மந்திரமயமான எண்ணங்கள்  எத்தேகத்தில் உண்டோ, அங்கு அத்தேகத்திலியே உள்மூச்சாக வாயுவும் அடங்கிவிடும். “மனம் அடங்க பிராணன் அடங்கும், பிராணன் அடங்க மனம் அடங்கும்” என்பது பகவான் ரமண மகரிஷியின் அனுபவ உபதேசம்.

மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை:
மன்: என்னும் மந்திரம் இல்லாத                புற எண்ணங்கள் மட்டுமே கொண்டுள்ள மனமானது, வாழும் அத்தேகத்தை விட்டு எப்பொழுதும் வெளியிலேயே தான் சுற்றிக் கொண்டிருக்கும். அதேபோன்று   வாயுவும் வெளிமூச்சாக அத்தேகத்தை விட்டு வெளியே, அம்மனதுடன் கலந்து சுற்றிக் கொண்டுதான் இருக்கும். முடிவு என்னும் மரணம் நெருங்கும்போது, அத்தருணத்தில் மனமானது வேறு எத் தேகத்தை பற்றி கொண்டிருக்கிறதோ, அங்கேயே வாயுவும், அதுவரை தான் குடி கொண்டிருந்த தேகத்தை உதறித் தள்ளிவிட்டு , அம்மனதையே பின்பற்றிச் செல்லும்.

மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு: மன்மனம்:  மந்திரமயமான எண்ணங்களால் மட்டுமே கிட்டும் தூய மகிழ்வில் இடைவிடாது மகிழ்ந்திருப்பாருக்கு…

மன்மனத்து உள்ளே மனோலயம் ஆமே: மன்மனம்:  மந்திரமயமான  எண்ணங்களால்  உருவான வெட்ட வெளி என்னும் ஆற்றலில் , எப்பொழுதும் வெளிக் கிளம்பி செல்லும் தன்மை கொண்ட எண்ணங்கள் யாவும், தேகத்துக்குள் வெளிப்பட்ட வெட்டவெளி என்னும் ஆற்றலால், புறத்திலிருந்து உள்ளுக்குள் ஈர்க்கப்பட, மனமானது, பிராணனுடன் இணைந்து இயல்பாகவே மந்திரத்துக்குள் லயம் அடைந்து விடும்.

“வெளிக்குள் வெளி உள்கடந்து சும்மா இருக்கும் சுகம்” என்ற இந்த தம் அனுபவத்தை, வள்ளல் பெருமானும் திருவருட்பா பாடல் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார்.

இதன் விளைவாக, உயிர்த்தெழுதல் அல்லது அழியாமையை அடைய ஒவ்வொருவரும் மனம் மற்றும் சுவாசத்துடன் சேர்ந்து தனக்குள்ளேயே இறக்க வேண்டும். இருப்பினும், தங்கள் உடலுக்கு வெளியே மனம் மற்றும் சுவாசத்துடன் சேர்ந்து இறக்கும் எவரும் ஒரு புதிய பிறப்பை அனுபவிப்பார்கள்.

கடைசியாக ஆனால் முக்கியமாக, ஒவ்வொருவரும் வெளியே இறப்பதற்குப் பதிலாக தங்களுக்குள்ளேயே இறக்கத் தயாராக வேண்டும். இதன் பொருள் ஆன்மீக ரீதியாக இறப்பது என்ற கருத்தை  புரிந்துகொண்டு, தகுந்த குருவின் வழிகாட்டுதலுடன் இந்த மாற்றத்தை அவரவர்கள் உடம்பின் உள்ளேயே அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“நீங்கள் இறப்பதற்கு முன் உங்கள் மரணத்தைக் காணுங்கள்” என்றும் சூஃபித்துவம் இதையே கற்பிக்கிறது.
திருச்சிற்றம்பலம், 🙏

One response to “திருமூலர் திருமந்திரம் உரை எண் 620 ன் விளக்கம்:”

Leave a reply to PETER FRANCIS Cancel reply