
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு’
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன் றோகுரு நாதன் மொழிந்ததுவே” -பட்டினத்தார் பாடியது
வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்:
சங்கும் சக்கரமும், பகவான் மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் வரை, அது வெட்டாத சக்கரமாகவும் பேசாத மந்திரமாகவும், அதாவது பயன்பாடு எதும் இல்லாமல் தான் இருந்து கொண்டிருக்கும்.
வேறொருவர்க்கு எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்து:
எப்பொழுது முக்தியை நாடும் பக்தன் ஒருவன் கடும் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு அதன் மூலம் தன் விந்துவை கட்டுக்குள் கொண்டு வந்து இறையாத தீர்த்தமாக்கி, அதன் மூலம் தம் நாபிக் கமலத்தில் மலர்ந்த செந்தாமரை ஒத்த, ஆனால் வேறு எவருக்கும் எட்டாத புஷ்பத்தை கொண்டு, ஸத்குருவாய் விளங்கும் இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கும் போது…
அதுவரை குருவின் கரங்களில் இருந்த வெட்டாத சக்கரமும், பேசாத மந்திரமும் பக்தனுக்கு அருளப்படும். அதை உரிய முறையில் பயனுள்ளதாக்கி, அதன் மூலம் பிறவித் தளைக்கு காரணமானவற்றை வெட்டி வீழ்த்தி, குருவாகிய இறைவனின் திருவடிகளை அடைந்து, பிறவாமை என்னும் பெரும் பேற்றை, இத்தகைய பக்தன் இப்பிறவியிலேயே எய்தி இனிதே முடிக்கலாம்.
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே முட்டாத பூசையன்றோ:
மாறாக சிற்றின்பத்திற்கு காரணமான லிங்க வடிவாக இருக்கும் ஆண்குறியை கட்டாமல் விந்துவை மனம் போன போக்கில் இறைத்து விரயம் செய்து, ஸத்குருவின் திருவடிகளில் நாட்டம் இல்லாமல், அதாவது சங்கும் சக்கரமும் இன்றி, பிறவித் தளையை வெட்டி வீழ்த்தி விடலாம் என்று நினைப்பது மடமையின் உச்சமாகும் என்று என் குருநாதன் எனக்கு மொழிந்தான்.
திருச்சிற்றம்பலம்🙏

