
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.

ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்:
மெய் வாய் கண் காது மூக்கு என்னும் ஐம்புலன்கள் கொண்ட ஐவரால் ஆனது ஒவ்வொரு மானுட யாக்கையும் ஆகும். இந்த ஐவருக்கும் நாயகனாக, அதாவது இவைகளை படைத்தவனாக இருக்கும் பரம்பொருள் இவ்- ஐம்புலங்களையும் கடந்து, உள்ளிருக்கும் நாபிக் கமலத்தில், நடுவாய் உயிர்வித்தாக, ஐம்புலன்களால் உருவான ஊரென்னும் இத்தேகத்தின் தலைமகனாக வீற்றிருக்கிறார்.

உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு:
மரணம் இல்லா பெருவாழ்வு என்னும் பெறும் பேற்றை நாடிய அனைவருக்கும் அளித்தருளும், அவ்வூரின் தலைமகனை சென்றடைய, குருவருளால் திருத்தப்பட்டு பின் திருவாசியாக மாறிய உள்மூச்சு என்னும் குதிரை ஒன்று உண்டு.
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும்: கடிவாளம் இல்லாத அக்குதிரையின் மீது ஏறி குருவின் மீது கொண்டுள்ள மெய்யான விசுவாசத்தையே கடிவாளமாக ஆக்கி, இறப்பில்லா பெருவாழ்வை வேண்டி, தன்னுளிருக்கும் பரம்பொருளை நோக்கி பயணிப்பவர்களை, அக்குதிரையும் தம் மந்திரத்தால் கீழே விழாமல் தாங்கிப் பிடித்துக்கொண்டு, பத்திரமாக உள்ளிருக்கும் பரம்பொருளிடம் அவர்களை கொண்டு சேர்க்கும்.
கொடாதுபோய்ப் பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே:
மாறாக குருவின் மீது மெய்யான விசுவாசம் கொள்ளாமல் பொய்யர்களாக மாறி, அம் மந்திரக் குதிரையின் மீது ஏறி பயணித்தால், அத்தகையவர்களை அக்குதிரையானது, அவர்கள் விடும் வெளி மூச்சின் வழியே புறந்தள்ளி வெகு கீழான பிறவிகளுக்கு கொண்டு சென்று அதனுள் அவர்களை புகுத்தி விடும்.
திருச்சிற்றம்பலம் 🙏

