திருமூலர் திருமந்திரம் உரை எண் 735 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை
பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலஉள

கண்டம் கறுத்த கபாலியும் ஆமே.


“ஓம். அது பூர்ணம் இதுவும் பூர்ணம்        பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமாயுள்ளது. பூர்ணத்திலிருந்து       பூர்ணத்தை எடுத்தும் பூர்ணமே எஞ்சி நிற்கின்றது” என்று ஈஸா வாஸ்ய உபநிஷதம்: சுலோகம் 1ல் சொல்லப்பட்டுள்ளது.


தூய உணர்வாக, பூர்ணமாக, அண்டம் முழுவதுமாக வியாபித்து இருக்கும் பரம்பொருள் சமுத்திர நீருக்கு ஒப்பானது. அந்த பூர்ணத்திலிருந்து, அதன் தன்மையாகவே அதாவது அதன் உணர்வாகவே தோன்றிய, எண்ணற்ற உருவங்கள் அல்லது பிண்டங்கள் யாவும் பூர்ணமே. ஒவ்வொரு பிண்டமும் சமுத்திர நீரில் இருந்து அதன் தன்மையாகவே அதாவது சமுத்திர நீரின் தன்மையாகவே தோன்றிய ஒவ்வொரு நீர்க்குமிழிக்கு ஒப்பானது.


அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை:
அண்டம் முழுவதும் வியாபித்துள்ள unlimited என்னும் வரம்பற்ற  தூய உணர்வானது, ஐம்புலன்கள் ஐம்பொறிகள் இவைகளின் வழியாக limited என்னும் வரையறுக்கப்பட்ட பிண்டமாக, சுருங்கினாலும், அதாவது    பூர்ணத்திலிருந்து பூர்ணம் உதயமானாலும், அண்டத்துக்கோர், உயிர் வித்துக்கோர் அழிவில்லை. அது பூர்ணமாகவே எஞ்சி நிற்கும்.


பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும் :
எவ்வாறு நீர்க்குமிழி வடிவம் சுருங்கி மறைந்தாலும் அதில் சூழ்ந்துள்ள நீர் சமுத்திரத்தோடு கலந்து ஒன்றாகி விடுவது போல், பிண்டம் சுருங்கினாலும் அதில் அடங்கியுள்ள பிராணன்கள் தூய உணர்வில் நிலைபெறும்.


உண்டி சுருங்கில் உபாயம் பலஉள:
பிராணனும் சரீரமும், உணவாகவும் உண்பவனாகவும் ஆகிறது” என்னும் தைத்தரியோ உபநிஷத் வாக்கின்படி, பிராணவாயுவே  பிண்டத்திற்கு குருவருளால் முறையான உணவாக ஆகும்போது, பிராணனும், சரீரமும் ஒன்றினில் ஒன்றாக ஒடுங்கி, சுருங்கில்..


கண்டம் கறுத்த கபாலியும் ஆமே:
அப்பிண்டத்தை விட்டு பிராணங்கள் எங்கும் வெளி கிளம்பி செல்லாமல் அப்- பிண்டத்தின் கண்டத்திலேயே திருநீலகண்ட சிவமாக நிரந்தரமாக நிலைபெற்று இருக்கும்.
திருச்சிற்றம்பலம் 🙏