
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்
கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.

கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார்:
கள்ளம் என்றால் புறத்தில் செய்யக்கூடிய கள்ளம் என்று பொருள் கொள்ளலாகாது, ஏனெனில் புறத்தில் செய்யக்கூடிய கள்ளம் என்றோ ஒரு நாள் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தே தீரும். ஆனால் ஒருவர் மனத்தளவில் செய்யக்கூடிய கள்ளம் என்பது, அதாவது ‘பிறன் மனை நோக்குதல்’ போன்ற கள்ளத்தனமான எண்ணங்களை, எவராலும் எக்காலத்தும் அறிய இயலாது. அவ்வாறு கண்காணி இல்லை என்று மனதளவில் இக்கள்ளத்தனத்தை, அதாவது விபச்சாரத்தை பலரும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

கண்காணி இல்லா இடமில்லை காணுங்கால்:
ஒவ்வொரு மனதிற்கும் கண்கள் உண்டு, மனம் செய்யும் கள்ளத்தனத்தை அது கண்காணித்துக் கொண்டுதான் இருக்கும். உரிய நேரம் வரும்போது அக்-கள்ளத்தனத்திற்கு உரிய தண்டனை அவரவர்களின் புறத்திலிருந்து வெளிப்படும். அதாவது கண்காணி இல்லாமல் எண்ணங்கள் மட்டும் தனித்து மனதில் எழாது என்பதை ஒருவர் உணருங்கால்…

கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானை:
மனதின் கள்ளத்தனத்திற்கு துணையாக நிற்கும் ஐம்புலன்கள், ஐம்பொறிகள் அகங்காரம், இவை யாவற்றிலும் கண்காணியாக சிவம் கலந்து நிற்பதை…
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே:
அதாவது அக்-கண்காணியான சிவத்தை ஒருவர் தம்முள் எங்கும் கண்டு உணரும்போது, அத்தகையவர் மனதில் இருந்து கள்ள எண்ணம் கொண்ட கள்வர்கள் முற்றிலும் ஒழிந்து போவார்கள்.
திருச்சிற்றம்பலம்🙏

