ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

அவ்வவர் மண்டலமாம் பரிசு ஒன்று உண்டு
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க்கே வரில் அவ்வவர் மண்டலம் ஆயம் மற்றவர்க்கே.

அவ்வவர் மண்டலமாம் பரிசு ஒன்று உண்டு:
ஒவ்வொருவரின் மண்டலம் என்னும் பூமியின் அம்சமாகிய இத்தேகத்துக்குள், சிந்தாமணி என்னும் ஓர் உயர்ந்த பரிசு, அதாவது வேண்டுவனவெல்லாம் அளிக்கு தெய்வமணியை ஒத்த பரிசுப் பொருள் ஒன்று உண்டு. அது அவரவர்களின் நாபிக்கமலத்தில் குடி கொண்டிருக்கும் உயிர் வித்தாகிய சிவமேயாகும்.
அவ்வவர் மண்டலத்து அவ்வவர் தேவராம் :
சிந்தாமணி என்னும் உயிர் வித்தான அப்பரிசு அவ் உடம்பை விட்டு பிரியாத வரை, அதாவது சிந்தாத, சிந்தா மணியாக இருக்கும் வரை, அவரவர்கள் தேகத்திற்கு அவரவர்கள் தேவரும் ஆவார்கள்.

அவ்வவர் மண்டலம் அவ்வவர்க்கே வரில்: இத்தகைய உயரிய பரிசான சுத்த சிவம் குடி கொண்டிருக்கும் சிவாலயமான இத்தேகம், நிரந்தர மண்டலமாக குருவருளால் அச் சிவத்துக்கே உரியதாக ஆகிவிடில்…

அவ்வவர் மண்டலம் ஆயம் மற்றவர்க்கே: இவ்வாறு தம் உயிர் குடியிருக்க ஒரு நிரந்தர மண்டலமாக தம் தேகத்தை ஆக்கிக் கொண்டவர்களின் இருப்பிடமானது, அருளை நாடிவரும் ஏனைய மக்கள் கூட்டத்தால் எப்பொழுதும் நிரம்பி வழியும்.
திருச்சிற்றம்பலம்🙏🏿

