
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார் இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து இராப்பகல் மாயை இரண்டடித் தேனே.
இராப்பகல் அற்ற இடத்தே இருந்து:
இரவு பொழுது என்பது சந்திர ஒளியாலும் பகல் பொழுது என்பது சூரிய ஒளியாலும் அறியப்படுகிறது. இரண்டும் ஒரு சேர உதித்தால் அதுவே இராப்பகல் அற்ற நிலையாகும்.
பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்:
மானுட தேகம் சுவாசிக்கும் போது வலது நாசியின் வழியாக செல்லும் காற்று சூரியக்கலை அம்சமாகவும் இடது நாசியின் வழியாக செல்லும் காற்று சந்திரக்கலை அம்சமாகவும், ஆயினும் ஏதோ ஒரு அம்சமாக மட்டும்தான் தேகத்துக்குள் போகும். ஆனால் குரு அருளால் கிடைக்கப்பெற்ற ராஜ யோக பயிற்சியின் போது சூரிய கலை சந்திர கலை இவ்விரண்டும், இரண்டு நாசிகளின் வழியாக ஒருசேர இயங்கும்போது, உள்ளூர ஊறும் ஆனந்த தேனை பருகி, அதன் மூலம் இராப்பகல் அற்ற சமாதி நிலையை ஒருவர் தம் அகத்திலும், புறத்திலும் இடைவிடாது உணரலாம். ஆனால் அறிவிலீகள் இவ்வாறின்றி இராப்பகல் அற்ற இத்தகைய ஆனந்த நிலையை பெற , உயிரைக் குடிக்கும் மதுவை உண்டு, அதன் மூலம் வெகு சொற்ப காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இராப்பகல் அற்ற மயக்க நிலையை அடைந்து, மகிழ்ந்து, தம் வாழ்நாளை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து: மாறாக இராப்பகல் அற்ற திருவாசிகளாக இயங்கும் இறைவனின் திருவடிகளை இடைவிடாத ராஜயோகத்தின் மூலம் ஒருவர் பற்றினால்…
இராப்பகல் மாயை இரண்டடித் தேனே: அவனின் பேரருளால் பகலில் இரவையும், இரவில் பகலையும் கண்டுணரும் தத்துவ ஞானபோத நிலையை அடைந்து, அதன் மூலம் மாயப் பிறப்பிற்கு காரணமான இராப்பகல் அற்ற நிலையை எய்தலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🏿

