திருமூலர் திருமந்திரம் உரை எண் 47 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே. 

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்:
உயிரானது தான் தங்கும் இடமாக ‘மனை’ என்னும் ஓர் கூட்டை விட்டு மற்றொரு கூடு என பறந்து கொண்டே இருக்கும். பல காலம் செய்த மாதவத்தால், தெய்வம்சம் பொருந்திய மானுட தேகம்   கிடைக்கப்பெற்ற பின்பு தான் விலைமதிப்பு இல்லா பெருமையை அவ் உயிர் பெறுகிறது.

நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்:
ஆதலின் அவ் உயிரும் அத்தேகத்தின் நினைவில் நேசத்தோடு இருக்கும். அதாவது “உடம்போடு உயிரிடை நட்பு” என்று வள்ளுவர் பெருமான் தம் திருக்குறளில் சொல்லி உள்ளதுபடி, ஒன்றை விட்டு ஒன்று இணை பிரியாமலேயே நிற்கும்.

பனையுள் இருந்த பருந்தது போல:
அவ்வாறின்றி மானுட வடிவில் உள்ள தெய்வம்சங்களை உணர பெறாமல், பனை மரத்திலேயே வாசம் செய்தாலும் அதில் உள்ள எண்ணற்ற பயன்கள் எதையும் அறியாமல் அதை விட்டு அகலும் பருந்து என்னும் பறவை போல…

நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே:
இளைப்பாற சில காலம் என்று மற்ற ஜீவராசிகளின் கூட்டினைப் போல தெய்வம்சம் கொண்ட இம் மானுட தேகத்தையும் சில காலம் தங்கப் போகும் ஒர் கூடாரம் போல் கருதி, பனைமரத்துப் பருந்து போல சில காலம் இவ் உடம்பில் வாசம் செய்து விட்டு,  ஆனால்  சிவாலயமாக அமைந்திருக்கும் மானுட தேகத்தின் பயன்களைப்  பற்றி நினையாமல், உணராமல், இம்மானுட உடம்பை விட்டு  அகன்றால் அதனால் அவ் உயிர் அடையும் இன்பம் என்பது ஏதும் இல்லை!
திருச்சிற்றம்பலம் 🙏