
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
திருமூலர் திருமந்திரம் உரை எண் 41 ன் விளக்கம்:
சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

நாபிக் கமலத்தில் இருக்கும் திருப்பாற்கடலுக்கு நிகரான மிகச் சிறிய -நீர் துளி போன்ற உயிர் வித்துவில் இருந்து அமிர்தம் கடைய, மேரு மலைக்கு நிகரான மந்திர ஒலியை மத்தாக்கி, வாசுகி என்னும் நாகத்திற்கு நிகரான உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்னும் இவ்விரண்டையும், கடையும் கயிராக்கி கடையும்போது, முதலில் மூச்சின் சினத்தால் வெளிப்படும் விஷத்திற்கு ஒப்பான தன்மைகள், தேகம் முழுவதும் பரவி அழிவை ஏற்படுத்தாமல் இருக்க…
அக்கணத்தில் 70 தாய்மார்களுக்கு நிகரான குருவருள் சக்தி வடிவாக உடனிருந்து அவ்-விஷத்தை தோன்றி நிலையிலேயே நிலை நிறுத்தி காத்தருளும்.
அவ்வாறு குருவருள் என்னும் சக்தியின் துணை இன்றி செய்யப்படும் இத்தகைய யோகத்தில் வெளிப்படும் விஷமானது தடுப்பார் யாருமில்லாததால் அது தேகம் முழுவதும் பரவி அழிவையே ஏற்படுத்தும்.
எவ்வாறு இனப்பெருக்கம் செய்யும் போது பெண் மானை விட்டு ஆண் மான் ஒரு போதும் விலகாது இருக்கிறதோ, அவ்வாறே இத்தகைய யோக பயிற்சியின் போது குருவருளை இடைவிடாது பற்றிய படியே இருந்தால், இறையருள் என்னும் அமிர்தம் கிட்டி, இறவாமை என்னும் பேரின்ப பேற்றைப் பெறலாம்.
திருமூலர் திருமந்திரம் உரை எண் 42 ன் விளக்கம்:

போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கு
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே.
மேலும் இத்தகைய யோக மார்க்கத்தில் மாயையின் வசத்தால் தொய்வு ஏற்பட்டு பேரின்ப பேற்றை அடைய முடியாத நிலை ஏற்பட்டாலும், அதாவது மீண்டும் பிறக்கும் நிலை உருவானாலும் கூட மூங்கில் போலும் தோளுடைய உமையவளின் நாயகனான சிவபெருமானின் திருவருள் குருவருளாக அவர்களின் அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடரும்.
திருச்சிற்றம்பலம் 🙏

