
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
ஆற்றுகிலா வழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக்கும் கிழக்குத் திசை எட்டொடும்
ஆற்றுவேன் அப்படி ஆட்டவும் ஆமே.
ஆற்றுகிலா வழி யாகும் இறைவனை: ஆற்றும் என்றால் இயலும் என்பது பொருள். ஆற்றுகிலா என்பது ஆற்றும் என்பதற்கு எதிர்மறை சொல், அவ்வகையில் ‘ஆற்றுகிலா வழி’ என்பதற்கு எல்லோருக்கும் இயலாது வழி என்று பொருள் கொள்ளவேண்டும்.
“அன்பின் வழியது உயிர்நிலை” என்பது வள்ளுவரின் வாக்கு. அன்பின் வழியே சிவத்தின் வழியாகும் என்பது திருமூலரின் திருமந்திரம். அன்பின் வழி என்பது நாசித் துவாரத்திற்கும் நாபிக் கமலத்திற்கும் இடையில் உள்ள வழியே ஆகும். குருவருள் துணை இன்றி இத்தகைய வழியில் பயணித்தல் என்பது எவருக்கும் ‘ஆற்றுகிலா வழி’ அதாவது இயலாத வழியே ஆகும்.
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்:
ஒருவருக்கு இறையருள் குருவருளாக கூடி இத்தகைய இயலாத வழியில் பயணித்து இறைவனை இடைவிடாது போற்றிக் கொண்டும் புகழ்ந்து கொண்டும் இருந்தால்,
மேற்றிசைக்கும் கிழக்குத் திசை எட்டொடும்
ஆற்றுவேன் அப்படி ஆட்டவும் ஆமே:
அத்தகையவரின் தேகத்திற்கு வெளியே சூழ்ந்திருக்கும் எட்டு திசைகளோடு, தேகத்தின் உள்ளே நாசித் துவாரத்திற்கும் நாபிக் கமலத்திற்கும் இடையில் உள்ள மேல் கீழ் இன்னும் இரண்டு திசைகளையும் சேர்த்து ஆக மொத்தம் பத்து திசைகளின் வழியாகவும், அவனை சிவமாக்கி ஆண்டருள் புரிவான் எம் ஈசன்.
திருச்சிற்றம்பலம் 🙏

