
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
பதிபல ஆயது பண்டு இவ்வுலகம் விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்
துதிபல தோத்திரம் சொல்ல வல்லாரும் மதியிலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.
பதிபல: பல தெய்வங்கள், பண்டு: பழமையான
ஆதியிலிருந்து இவ்வுலகம் பல தெய்வ வழிபாடுகளை கொண்டதாய் இருந்தது மேலும் அந்தந்த தெய்வங்களை வழிபட பல விதிகளையும் அவர்களே வகுத்துக் கொண்டனர். அதற்கு மேலும் பலவகை தோத்திரங்களையும், வழிபாடுகளையும் செய்வதின் மூலம் கிட்டும் தற்காலிகமான மனம் அடங்கப் பெறுதலில்…
மெய்மை உணரார்: தம் மெய்யில், அதாவது தம் உடம்பில் குடி கொண்டிருக்கும் பரம்பொருளை பற்றிய அறிவை உணராமல், புற வழிபாடுகள் மூலம் அவ்வப்போது கிடைக்கும் தற்காலிகமான மனம் அடங்கப் பெறுததிலேயே மதி மயங்கி, பொன்னான காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் யாவரும், உண்மையில் மதி இருந்தும் இல்லாதவர்களே.
அதாவது ஒருவர் தம் மெய்யில் உணர்ந்த பரம்பொருளின் பிரதிபலிப்பாக புறத்தில் உள்ள தெய்வங்களை துதித்து வழிபடும் போது தான் அது நிரந்தர மனஅமைதிக்கு வழி வகுக்கும் என்பது இதன் உட்பொருள்.
அப்பர் பெருமான் அருளிய:தேவாரம்.
“என்னில் ஆரும்எனக்கு இனியார்இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்துபுக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே”.
திருச்சிற்றம்பலம் 🙏

