
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்
மேவு பிரான்விரி நீருலகேழையும்
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை
பாவு பிரான்அருட் பாடலு மாமே.
தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்:
ஒவ்வொரு மானுட உடம்பில் மத்தியில் உயிர் வித்தாக வீற்றிருக்கும் தேவர்களுக்கெல்லாம் முதல்வனான பரம்பொருள் திசை பத்திலும் காற்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறான். திசையில் பத்து என்பது தேகத்தின் வெளியே காற்றால் சூழப்பட்டிருக்கும் எட்டு திசைகள், தேகத்தின் உள்ளே அதே காற்றே வாசியாக மேலும் கீழுமாக ஆக மொத்தம் பத்து திசைகளிலும் அவனின் அருள் சக்தி காற்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேவு பிரான்விரி நீருலகேழையும்:
உலகில் உள்ள ஏழு கடல்களின் மொத்த பரப்பளவு 70 சதவிகிதம், அது போன்று ஒவ்வொரு மானுட தேகமும் அதே 70 சதவிகித அளவு கொண்ட நீரினால் சூழப்பட்டிருக்கிறது.
தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை:
இவ்வாறு பரந்து விரிந்த இந்நீர் பரப்பை கடந்து, பரம்பொருள் ஒவ்வொருவர் நாபிக் கமலத்தின் உள்ளும் வீற்றிருக்கிறான். இவ்வாறு ஒவ்வொரு மானுட தேகத்தின் உள்ளும், பத்து திசைகளிலும் பரவி வியாபித்து இருக்கும் அளப்பரிய ஆற்றல் கொண்ட அவனை தன்னுள் உணர்ந்தறிய கூடியவர்கள் எவரும் இல்லை.
பாவு பிரான்அருட் பாடலு மாமே;
அத்தகைய அவனின் அருளை பெறுவதற்கு குருவருளால் எங்கும் பரவி உள்ள காற்றை திருவாசியாக்கி, அதன் மூலம் ஏழு கடல் தாண்டி உள்ளிருக்கும் உயிர் வித்தாகிய ஈசனை இடைவிடாது போற்றி புகழும் போது, அவனின் அருள் பத்து திசையிலும் வியாபித்து விளங்குவதை உணரலாம்.
திருச்சிற்றம்பலம் 🙏

