திருமூலர் திருமந்திரம் உரை எண் 31 ன் விளக்கம்:

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்:
பூமியை குறிக்கும் ‘மண்ணகம்’ என்பது காற்று, மண், நீர் மற்றும் நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.  ஒவ்வொரு சரீரமும் பூமியின் அம்சமே ஆகும். பூமியில் விளையும் உணவுப் பயிர்கள் யாவும், அதே அம்சங்கள் அடங்கிய சரீரத்துக்கு, பிராணன் மற்றும் நீருடன் கலந்த உணவாக ஆகிறது. இவ்வாறு அன்னமயமான சரீரம், ஒவ்வொரு சரீரத்துள்ளும் விளங்கிக் கொண்டிருக்கும் ஐந்தாவது பூதமாக அடங்கியிருக்கும் ஆகாசத்துக்கு உணவாகின்றது.
:ஒக்கு’ என்பது ஒத்துப் போகுதல் என்று பொருள், இவ்வாறு பூமியும் ஆகாசமும் ஒன்றிலொன்று ஒத்து போன பின்பு அதன் தன்மைகள் முழுவதும் மறைந்து அங்கு அன்னமயமான பிரம்மசக்தி ஒன்றே நிலை பெறுகிறது. இவ்வாறாக மண்ணக சிவசக்தியும் வானக சிவசக்தியும் ஒன்றில் ஒன்று ஒத்து எங்கும் சிவமாய் ஆகிவிடும்.

விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்:
விண் என்னும் ஆகாசத்தில் படர்ந்திருக்கும் இருக்கும் ஒலி அதிர்வுகள் முறையாக கிரகிக்கப்பட்டு வேதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் விண்ணில் உள்ள சப்த அதிர்வுகளும், அதை கிரகித்து வேதமாக ஓதும் வேதியர்களும் ஒன்றில் ஒன்று ஒத்துப் போகும்போது எல்லாம் சிவமயமாய் ஆகிவிடும்.

பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே:
அதுபோன்றே பாடுபவர்களின் வாயிலிருந்து வெளிப்படும் பாட்டு அதற்கு ஏற்ற ஸ்வரத்துடன் முறையாக ஒத்து போய் வெளிவரும் போதுதான் அது இன்னிசையாக அனைவரும் கேட்டு மகிழும்படியாக அமையும். அவ்வகையில் பாடுபவரும் ஏழு ஸ்வரங்களும் ஒன்றில் ஒன்று ஒத்துப்போகும் போது எல்லாம் சிவமயமாய் ஆகிவிடும்.

கண்ணகத் தேநின்று காதலித் தேனே:
அப்படிப்பட்ட சிவத்தை ஒருவர் இரு கண்களும் மூடிய நிலையில், தம் அகத்துனுள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் அன்புடன் ஒத்துப் போகச் செய்யும்போது, சிவமானது அன்பே சிவமாய் அமர்ந்திருப்பதை உணரக் காணலாம்.
திருச்சிற்றம்பலம் 🙏